சென்னை
திருவொற்றியூரில் நடுரோட்டில் பாமாயில் கொட்டியதால் வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்தனர்
|திருவொற்றியூரில் நடுரோட்டில் பாமாயில் கொட்டியதால் வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்தனர்.
சென்னை துறைமுகத்தில் இருந்து வியாசர்பாடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்துக்கு பாமாயில் ஏற்றிக்கொண்டு ஒரு டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. லாரியை செங்குன்றத்தைச் சேர்ந்த டிரைவர் வேலாயுதம் (வயது 49) என்பவர் ஓட்டிச் சென்றார். செல்லும் வழியில் லாரியை திருவொற்றியூர் டோல்கேட் பகுதியில் நிறுத்தி விட்டு டீ குடித்து விட்டு வந்து பார்த்தபோது டேங்கில் இருந்து எண்ணை ஒழுகி கொண்டிருந்தது. இதனை பார்த்த டிரைவர், அதனை அடைக்க முயன்றார். அப்போது வால்வு முழுவதும் திறந்து கொள்ளவே சாலையில் பாமாயில் குபுகுபுவென கொட்டியது. உடனே சுதாரித்துக் கொண்ட டிரைவர், போராடி வால்வை அடைத்தார். அதற்குள் வெளியான பாமாயில் சாலையில் வழிந்தோடியது.
இதனால் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் சாலையில் வழுக்கி விழுந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவொற்றியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலையில் வழிந்து கிடந்த பாமாயில் மீது மண்ணை கொட்டி எண்ணெய் படலத்தை அகற்றினர். அதன்பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.