நாமக்கல்
பள்ளிபாளையத்தில்பழுதடைந்த மேம்பாலங்கள் சீரமைக்கப்படுமா?வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
|பள்ளிபாளையம்:
பள்ளிபாளையத்தில் பழுதடைந்த மேம்பாலங்கள் சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேம்பாலங்கள்
பள்ளிபாளையத்தில் காவிரி ஆற்றின் மேற்பகுதியில் ரூ.35 கோடியில் புதிய உயர்மட்ட பாலமும், காவிரி ஆர்.எஸ் பகுதியில் ரூ.25 கோடியில் நுழைவு பாலமும், எஸ்.பி.பி. காலனியில் ரூ.45 கோடியில் மேம்பாலமும் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்டது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் மிகவும் குறைந்து போக்குவரத்து சுலபமானது. கனரக வாகனங்கள் மற்றும் பஸ்கள் இடையூறு இல்லாமல் சென்று வருகின்றன.
தற்போது காவிரி ஆற்றின் மேற்பகுதியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில் ஆங்காங்கே பழுதடைந்து பள்ளமாக காட்சி அளிக்கின்றன. நீண்ட காலமாக அந்த பள்ளம் சரி செய்யப்படாமல் உள்ளதால், அது விரிவடைந்து குண்டும், குழியுமாக மாறும் நிலை உருவாகி வருகிறது. இதனால் பாலம் சேதமடைய வாய்ப்பு உள்ளது. இதுதவிர பழையபாலம், புதிய பாலம் என 2 பாலங்களிலும் ஓரத்தில் மண் சேர்ந்து குவியலாக உள்ளது. அதனால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் நிலை தடுமாறி சறுக்கி விழும் வாய்ப்புள்ளது.
பள்ளங்களால் விபத்து அபாயம்
இதேபோல் காவிரி ஆர்.எஸ்.நுழைவு பாலத்தில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி சிமெண்டு பூச்சு பெயர்ந்து பல இடங்களில் பள்ளமாக உள்ளது. பஸ், வாகனங்கள் செல்லும் போது பள்ளத்தில் இறங்கி செல்வதால் ஓரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும் மழைநீர் தேங்குவதால் பள்ளங்கள் இருப்பது தெரிவது இல்லை. நெடுஞ்சாலைதுறையினர் இதை கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இதேபோல் எஸ்.பி.பி. காலனி மேம்பாலத்தில் பாலத்தின் ஓரத்தில் செடிகள் வளர்ந்துள்ளன. இதனால் நாளடைவில் செடிகளின் வேர் பாலத்தின் கீழ் இறங்கினால் பாலம் பழுதடைய வாய்ப்புள்ளது. இதையும் அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
வாகனம் ஓட்ட சிரமம்
இதுகுறித்து சரக்கு வாகன டிரைவர் மாணிக்கம் கூறியதாவது:- நான் லாரியில் காவிரி ஆர்.எஸ். பகுதிக்கு சரக்கு எடுத்து சென்று வருவது வழக்கம். கடந்த 3 மாதங்களாக மழை காலத்தில் நுழைவு பாலத்தின் அடியில் நீர் தேங்கி இருப்பதால் பள்ளங்களால் இருப்பது தெரியவில்லை. இதனால் சரக்குடன் லாரி ஓட்ட சிரமமாக உள்ளது. அதிகாரிகள் அதை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உரிய நடவடிக்கை
மில் தொழிலாளி குமார்:- நான் மில்வேலைக்கு மோட்டார் சைக்கிளில் தினந்தோறும் நுழைவுபாலத்தின் கீழ் செல்வது வழக்கம். அப்போது மழைநீர் பள்ளங்களை மறைத்து இருப்பதனால் பள்ளத்தில் இறங்கி 2 முறை விழுந்துள்ளேன். அந்த நேரத்தில் வாகனங்கள் வராததால் பெரிய விபத்து ஏற்படவில்லை. இருந்தாலும் மழை நீரை வெளியேற்ற நெடுஞ்சாலைத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளங்களை மூட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.