துணை முதல்-அமைச்சர் உதயநிதிக்கு பழனிவேல் தியாகராஜன் வாழ்த்து
|துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பழனிவேல் தியாகராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்கும்போதே உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பு ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படவில்லை. கடந்த 2022-ம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சர் பதவி வழங்கவேண்டும் என்று முக்கிய அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்தனர். இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தற்போது துணை முதல்-அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-அமைச்சரானநிலையில் தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர். துணை முதல்-அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகாஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "கழகத் தலைவர் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் துணை முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள, அன்புச்சகோதரர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்ந்தேன்" என்று அதில் பதிவிட்டுள்ளார்.