< Back
மாநில செய்திகள்
பழனி தண்டாயுதபாணி கோவில் பிரசாதம்; காலாவதி தேதியை குறிப்பிட்டு வழங்க நடவடிக்கை
மாநில செய்திகள்

பழனி தண்டாயுதபாணி கோவில் பிரசாதம்; காலாவதி தேதியை குறிப்பிட்டு வழங்க நடவடிக்கை

தினத்தந்தி
|
10 Feb 2024 6:13 PM IST

பிரசாதங்களை தயார் செய்ய சுத்தமான எண்ணெய் பயன்படுத்தப்படுவதாக அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்,

அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த நிலையில் பழனி கோவிலில் கெட்டுப் போன பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும், கோவிலில் வழங்கப்பட்ட லட்டு, அதிரசம் உள்ளிட்டவை கெட்டுப்போய் சாப்பிட முடியாதபடி இருந்ததாகவும் புகார் எழுந்தது.

இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், பழனியில் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசாதங்களை தயாரிக்கும் நிலையங்களில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிலையில் பழனி தண்டாயுதபாணி கோவில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"பழனி திருக்கோவிலில் வழங்கப்படும் பிரசாதங்களை தயார் செய்வதற்கு சுத்தமான எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. அந்த பிரசாதங்களை பாக்கெட்டுகளில் அடைக்கும் முறைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி உரிய மாற்றங்கள் செய்யப்படும்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் பஞ்சாமிர்தத்தை அதில் குறிப்பிடப்பட்டுள்ள காலாவதி தேதியில் இருந்து மேலும் 15 நாட்கள் அதிகமாகவும் பயன்படுத்தலாம். பஞ்சாமிர்தத்திற்கு காலாவதி தேதி குறிப்பிடப்படுவதைப் போல் இனி முறுக்கு, லட்டு, அதிரசம் உள்ளிட்ட மற்ற பிரசாதங்களுக்கும் காலாவதி தேதியை குறிப்பிட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



மேலும் செய்திகள்