< Back
மாநில செய்திகள்
பழனி கோவில் வழக்கு; மதுரை ஐகோர்ட்டு கிளையின் தீர்ப்பை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்
மாநில செய்திகள்

பழனி கோவில் வழக்கு; மதுரை ஐகோர்ட்டு கிளையின் தீர்ப்பை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்

தினத்தந்தி
|
31 Jan 2024 7:43 PM IST

மக்களிடம் பகைமை உணர்வை விதைக்கும் வகையிலான தீர்ப்பு மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பழனி கோவில் வழக்கில் மதுரை ஐகோர்ட்டு கிளை வழங்கிய தீர்ப்பு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை பழனி முருகன் கோவிலுக்குள் இதர மதத்தினரை அனுமதிக்கக் கூடாது என்று ஓர் அரசியல் கட்சி பிரமுகர் தொடர்ந்த வழக்கில் நீதிபதி ஸ்ரீமதி, அந்த கோவில் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் உள்ள இந்து கோவில்கள் அனைத்துக்கும் பொருந்துமாறு ஒரு தீர்ப்பு வழங்கியுள்ளார்.

அந்தத் தீர்ப்பின்படி அறநிலையத்துறை கோவில் கொடி மரத்துக்கு அருகிலும், இதர முக்கியமான இடங்களிலும் "இந்துக்கள் அல்லாதவர்கள் கொடி மரத்துக்கு அப்பால் அனுமதிக்கப்பட மாட்டார்கள்" என விளம்பர பலகை வைக்க வேண்டும். இந்துக்கள் அல்லாதோரை கோவிலுக்குள் அனுமதிக்கக் கூடாது. இந்துக்கள் அல்லாத யாரும் ஏதாவது ஒரு கோவிலுக்குள் செல்லவிரும்பினால், அவர்கள் இந்து மதத்தின் நடைமுறைகளையும், பழக்க வழக்கங்களையும் பின்பற்றுவதாகவும், குறிப்பிட்ட கடவுளின் மீது நம்பிக்கை இருக்கிறது என்றும் உறுதிமொழி அளித்தால் உள்ளே செல்ல அனுமதிக்கப்படலாம். அப்படி அனுமதிக்கப்படும் இந்துக்கள் அல்லாதோர் குறித்த பட்டியலை பதிவேடுகளில் பராமரிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளார்.

மேலும், இந்தத் தீர்ப்பு பழனி செந்தில் ஆண்டவர் கோவிலுக்கு மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உள்ள அறநிலையத்துறை கோவில்கள் அனைத்துக்கும் பொருந்தும் என்றும் தீர்ப்பளித்துள்ளார். இந்தத் தீர்ப்பு இறை நம்பிக்கையுள்ளவர்களை காயப்படுத்தும் தீர்ப்பாகும். தமிழகத்தில் ஒரே நேரத்தில் எல்லா மத வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று வரும் வழக்கம் பல்வேறு பகுதி மக்களிடமும் நடைமுறையில் உள்ளது.

மதம் கடந்து இறை வழிபாடு செய்கிற மக்கள் ஏராளமாக உள்ளனர். அதேசமயம், பல்வேறு சமூக நிர்ப்பந்தங்கள் காரணமாகவும் பிறப்பின் அடிப்படையிலும் தங்களை ஒரு மதத்தைச் சார்ந்தவர் என்று வெளிப்படுத்திக் கொள்வதும் நடைமுறையில் உள்ளது.

இந்து மதத்துக்கு உள்ளேயும் சைவம், வைணவம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளும், வைணவத்துக்குள்ளும் வடகலை, தென்கலை போன்ற பிரிவுகளும் அதன் காரணமாக முரண்பாடுகளும், மோதல்களும் இருக்கிறது. நாளையே ஒருவர் இது சைவ கோவில் வைணவர்கள் வரக் கூடாது என்றோ, இது வைணவ கோவில் எனவே, சைவர்கள் வரக்கூடாது என்றோ நீதிமன்றத்தை நாடலாம். வைணவர் ஒருவர் வடகலைக்கு ஆதரவாகவோ, தென்கலைக்கு ஆதரவாகவோ இதர கலையை பின்பற்றுபவர் குறிப்பிட்ட கோவிலுக்குள் வரக்கூடாது, வர முடியாது என்று நீதிமன்றத்தை நாட வாய்ப்புள்ளது.

இதுவெல்லாம் இந்து மதத்தின் பல்வேறு பிரிவினர்களிடையே முரண்பாட்டையும், பகைமையையும் உருவாக்குவதற்கான அடிப்படையாக அமைந்து விடும் வாய்ப்புள்ளது. அதற்கு இந்த தீர்ப்பே தீனிபோடும் விதமாக அமைந்துவிடும். மேலும், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் கொடிமரத்துக்கு அப்பால் போக முடியாது என்றும் வேறு சில கோவில்களிலும் அப்படி இருப்பதாகவும் தீர்ப்பில் சொல்லப்பட்டிருப்பது உண்மைக்கு மாறானதாக உள்ளது. பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட பிறகு அதில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் இருப்பதற்கு வாய்ப்பில்லை.

இன்றுவரையிலும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் எல்லா பக்தர்களும் எந்த இடம் வரை செல்ல முடியுமோ அந்த இடம் வரை செல்வதற்கு அனைத்து மதத்தினருக்கும் அனுமதி அளிக்கப்பட்டே வருகிறது. தொல்லியியல் துறையின் கட்டுப்பாட்டில் வராத பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு மட்டுமே அதுவும் உடை கட்டுப்பாடு மட்டுமே அமலில் உள்ளது. தீர்ப்பில் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் குறித்த இந்த அம்சம் உண்மைக்கும் மாறாக இருக்கிறது.

இந்து மத கோவில்களில் வரலாற்று காலம் தொட்டு அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களும் செல்வதற்கு நடைமுறை உள்ளது. இப்போது ஏன் இந்த கட்டுப்பாடு என்ற கேள்விக்கு நியாயமான பதில் இல்லை. பிற மதங்களை சார்ந்த ஆலயங்களில் அனைத்து மதத்தினரும் சென்று வழிபடுவது காலம் காலமாக நடைபெற்று வரும் நிலையில் இந்தக் கட்டுப்பாடு மக்கள் ஒற்றுமையை பெரிதும் பாதிக்கக் கூடியதாக அமைந்து விடும்.

எனவே, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் மக்களிடம் பகைமை உணர்வை விதைக்கும் வகையிலான இந்த தீர்ப்பு மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அரசியல் நோக்கத்துக்காக தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில் தன்னை அறியாமல் நீதிமன்றமும் துணை போயிருக்கிறதோ என்கிற சந்தேகம் எழுகிறது.

இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு ஐகோர்ட்டு இந்த தீர்ப்பை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டுமென்றும், அதுவரையிலும் தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டுமெனவும் இந்து சமய அறநிலையத் துறை இந்த வழக்கில் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது."

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்