< Back
மாநில செய்திகள்
பழனி கோவில் வழக்கு: மனிதர்களை மதம் சார்ந்து பிளவுபடுத்தும் தீர்ப்பு - முத்தரசன்

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

பழனி கோவில் வழக்கு: மனிதர்களை மதம் சார்ந்து பிளவுபடுத்தும் தீர்ப்பு - முத்தரசன்

தினத்தந்தி
|
1 Feb 2024 5:04 PM IST

இத்தீர்ப்பை செயல் இழக்க செய்ய உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

சென்னை ஐகோர்ட்டின் மதுரைக் கிளை நேற்று முன்தினம் (30.01.2024) இந்து சமய கோவில்களில் இந்து சமயம் சாராதவர்களை அனுமதிக்கக் கூடாது என தீர்ப்பு வழங்கியுள்ளது. இது தமிழ்நாட்டில் சமய எல்லைகள் கடந்து அனைத்து சமய நம்பிக்கைகளையும் சமமாக கருதியும், மதித்தும் வருகிற நல்லிணக்க பண்புக்கு எதிரானது.

நாகூர் தர்க்காவிற்கும், அன்னை வேளாங்கன்னி தேவாலயத்திற்கும், பழனி திருக்கோவிலுக்கும், அனைத்து சமய நம்பிக்கை உள்ளவர்களும் சென்று வருவது வழிவழியான பழக்கமாக உள்ளது. இதன் மூலம் சமய வழிகள் வேறுபட்டாலும் எல்லா சமயங்களும் அன்பு, கருணை, இரக்கம், சகிப்புத் தன்மை என நல்லிணக்க உணர்வை தான் போதிக்கிறது என வேதங்களையும், சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்த சுவாமி விவேகானந்தர், வள்ளலார், இராமானுஜர் போன்ற சமய சான்றோர்கள் போதித்தும் வாழ்ந்தும் காட்டியுள்ளனர்.

இந்த ஆன்மீக வரலாற்று மரபுகளை கருத்தில் கொள்ளாமல் ஐகோர்ட்டு மதுரைக் கிளை வழங்கியுள்ள தீர்ப்பு சமூகத்தில் பகைமை வளர்க்கும் பிளவு சக்திகளை ஊக்கப்படுத்தும் பேராபத்தானது. எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் இத்தீர்ப்பை வழங்கிய நீதியரசர் மறுபரிசீலனை செய்து தீர்ப்பை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துவதுடன் இந்து சமய அறநிலையத் துறையும், தமிழ்நாடு அரசும் இத்தீர்ப்பை செயல் இழக்க செய்ய உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்