பராமரிப்பு பணிக்காக பழனி முருகன் கோவில் ரோப் கார் சேவை நிறுத்தம்
|பழனி முருகன் கோவில் ரோப் கார் சேவை வருடாந்திர பராமரிப்பு பணி காரணமாக 45 நாட்கள் நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பழனி,
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் தினந்தோறும் தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் விழாக்காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் பழனி மலைக் கோவில் சென்று முருகனை தரிசனம் செய்வது வழக்கம்.
அவ்வாறு வரும் பக்தர்கள் வசதிக்காக மின் இழுவை ரயில் மற்றும் ரோப் கார் சேவை இயக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான பக்தர்கள் ரோப் கார் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
தெற்கு கிரி வீதியில் அமைந்துள்ள ரோப் கார் நிலையத்திலிருந்து மலை கோவிலுக்கு செல்லும்போது இயற்கை அழகை ரசித்தபடி செல்வதால் பெரும்பாலான பக்தர்கள் ரோப் கார் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.இதற்காக பக்தர்களிடம் ரூபாய் 50 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
தினந்தோறும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை ரோப் கார் சேவை இயக்கப்படுகிறது.இதனால் தினந்தோறும் மதியம் 1.30 மணி முதல் 2.30 மணி வரை பராமரிப்பு பணி காரணமாக நிறுத்தப்படுகிறது. அதேபோல் மாதத்துக்கு ஒரு முறையும் வருடத்திற்கு 45 நாட்களும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
இந்த ஆண்டுக்கான பராமரிப்பு பணிகள் நாளை முதல் அடுத்த மாதம்( 30-7-2022) வரை நிறுத்தப்படுகிறது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் போது ரோப் கார் பெட்டிகள் கட்டப்பட்டு முக்கிய பாகங்களை பரிசோதிக்கப்படும்.
அதனைத் தொடர்ந்து ஏதேனும் பாகங்களில் பழுது ஏற்பட்டு இருந்தால் அது உடனடியாக அகற்றப்பட்டு புதிதாக பொருத்தப்படும்.பிறகு சோதனை ஓட்டம் நடைபெற்று பின்னர் பக்தர்கள் சேவைக்காக இயக்கப்படும் .
இதனால் நாளை முதல் பழனிக்கு வரும் பக்தர்கள் படி பாதை வழியாக அல்லது மின் இழுவை ரயில் மூலம் மலைக் கோயிலுக்குச் சென்று முருகனை தரிசனம் செய்யுமாறு கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.