< Back
மாநில செய்திகள்
பழனி முருகன் கோவில் அலுவலகத்தை இந்து முன்னணியினர் முற்றுகை
மாநில செய்திகள்

பழனி முருகன் கோவில் அலுவலகத்தை இந்து முன்னணியினர் முற்றுகை

தினத்தந்தி
|
9 Sept 2023 11:17 PM IST

பந்தல்-ஒலிப்பெருக்கி அமைக்க மாற்றுமதத்தினருக்கு ஒப்பந்தம் வழங்கியதால், பழனி முருகன் கோவில் அலுவலகத்தை இந்து முன்னணியினர் முற்றுகையிட்டனர்.

கோவில் அலுவலகம் முற்றுகை

இந்து முன்னணி அமைப்பின் பழனி பகுதி நிர்வாகிகள், அடிவாரத்தில் உள்ள முருகன் கோவில் தலைமை அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் கோவில் அலுவலகத்தை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மதுரை கோட்ட தலைவர் பாலன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் ராஜா, பொருளாளர் அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். பின்னர், பழனி முருகன் கோவிலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும், கோவில் நிர்வாகம் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை எனக்கோரி கோஷமிட்டனர்.

மாற்று மதத்தினருக்கு...

இதற்கிடையே மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன் தலைமையிலான போலீசார் அங்கு வந்தனர். இதேபோல் கோவில் அலுவலர்களும் அங்கு விரைந்தனா். இதனையடுத்து போராட்டம் நடத்திய இந்து முன்னணியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுகுறித்து இந்து முன்னணியினர் கூறும்போது, பழனி முருகன் கோவிலில் திருவிழாக்களின்போது அமைக்கப்படும் பந்தல்-ஒலிப்பெருக்கி போன்றவற்றுக்கான ஒப்பந்தம் மாற்று மதத்தை சேர்ந்தவருக்கு வழங்கப்பட்டு உள்ளது. இது கடும் கண்டனத்துக்கு உரியது. இதேபோல் கோவிலுக்கு சொந்தமான கடைகளை உள்வாடகைக்கு எடுத்து மாற்று மதத்தினரே பலர் பயன்படுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக கோவில் நிர்வாகத்திடம் முறையிட்டால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர்.

பழனியில் பரபரப்பு

பின்னர் இதுபற்றி கோவில் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்படும் என போலீசார், கோவில் அலுவலர்கள் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து இந்து முன்னணி அமைப்பினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக, பழனி அடிவார பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்