< Back
மாநில செய்திகள்
பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அலைமோதும் நோயாளிகள்  கூடுதல் டாக்டர்களை நியமிக்க கோரிக்கை
தர்மபுரி
மாநில செய்திகள்

பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அலைமோதும் நோயாளிகள் கூடுதல் டாக்டர்களை நியமிக்க கோரிக்கை

தினத்தந்தி
|
4 Oct 2022 12:15 AM IST

பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக நோயாளிகள் அலைமோதுகின்றனர். எனவே கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பாலக்கோடு:

பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக நோயாளிகள் அலைமோதுகின்றனர். எனவே கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

150 கிராமங்கள்

தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு முக்கிய நகரமாக விளங்கி வருகிறது. பாலக்கோட்டை மையமாக கொண்டு சுற்றுவட்டார பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. பாலக்கோடு சுற்றுவட்டார பகுதியில் மாரண்டஅள்ளி, பெல்ரம்பட்டி, பேளாரஅள்ளி, பஞ்சப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு தேவையான உயர் மருத்துவ சிகிச்சைகளை அளிக்க பாலக்கோட்டை தலைமையிடமாக கொண்டு தாலுகா பொது மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு பல்வேறு சிகிச்சைகளை பெற புறநோயாளிகளாக ஒரு நாளில் 800 பேர் முதல் 1,000 பேர் வரை வந்து செல்கின்றனர்.

இதேபோல் நூற்றுக்கணக்கானவர்கள் உள் நோயாளிகளாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுகின்றனர். பாலக்கோடு அரசு மருத்துவமனை கடந்த 2008- ம் ஆண்டு புதிய கட்டிடத்தில் 56 படுக்கை வசதியுடன் மேம்படுத்தப்பட்டது. இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு 106 படுக்கை வசதியுடன் மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டது. இந்த மருத்துவமனையில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு எக்ஸ்ரே, ஸ்கேன், ஈ.சி.ஜி., ரத்த பரிசோதனை, டயாலிசிஸ், பெண்களுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு ஆகியவை ஏற்படுத்தப்பட்டன.

டாக்டர்கள் பற்றாக்குறை

இந்த மருத்துவமனையில் தற்போதைய நிலவரப்படி 40 டாக்டர்கள், 40 செவிலியர்கள் மற்றும் 20 மருத்துவ பணியாளர்கள் பணிபுரிய வேண்டும். ஆனால் தற்போது இங்கு 12 டாக்டர்கள், 12 செவிலியர்கள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட குறைவான எண்ணிக்கையில் மருத்துவ பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 3 ஷிப்டுகளுக்கு போதிய அளவில் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் இல்லாததால் பொதுமக்களுக்கு முழுமையான சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதனால் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைப்பதில் பிரச்சினைகள் ஏற்படுவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

பாலக்கோடு பகுதி நெடுஞ்சாலையில் அடிக்கடி நடக்கும் விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி சிகிச்சை பெற பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அதிகளவில் வருகின்றனர்.

எக்ஸ்ரே வசதி

இதேபோல் இங்கு ஸ்கேன் வசதி, எக்ஸ்ரே வசதி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சோதனை வசதிகள் இருந்தபோதும் அவற்றை நடைமுறைப்படுத்தி ஆலோசனை வழங்க போதிய டாக்டர்கள் இல்லை. இதனால் சிகிச்சை பெற வருபவர்களுக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகளை உடனுக்குடன் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அரசு மருத்துவமனையில் போதிய அளவில் டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளன..

அறுவை சிகிச்சை பிரிவு

இதுதொடர்பாக பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். புதூரை சேர்ந்த சின்னசாமி:- பாலக்கோடு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு முக்கிய மருத்துவ சிகிச்சை மையமாக பாலக்கோடு அரசு மருத்துவமனை உள்ளது. விபத்தில் சிக்கும் பலர் சிகிச்சை பெற இந்த மருத்துவமனைக்கு வருகிறார்கள். ஆனால் இங்கே எலும்பு முறிவு பாதிப்பிற்கு உரிய சிகிச்சை அளிக்க டாக்டர்கள் இல்லை. எனவே எலும்புமுறிவு அறுவை சிகிச்சைக்கான சிறப்பு பிரிவை செயல்படுத்த வேண்டும். இந்த மருத்துவமனைக்கு வரும் புறநோயாளிகள், பொதுமக்களுக்கு கழிப்பிட வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும்.

மருத்துவ பணியாளர்கள்

பாலக்கோட்டை சேர்ந்த பாலாஜிகுமார்:- பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் அதற்கேற்ப டாக்டர்கள், செவிலியர்கள் போதிய அளவில் இல்லை. எனவே மருத்துவமனைக்கு தேவையான அளவில் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களை நியமிக்க வேண்டும். அதன்மூலம் இங்குள்ள அனைத்து சிறப்பு சிகிச்சை பிரிவுகளையும் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மருத்துவமனை வளாகம் சற்று தாழ்வான பகுதியில் அமைந்துள்ளது. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் கழிவுநீருடன் சேர்ந்து தேங்குவதால் கொசு தொல்லை அதிகளவில் உள்ளது. எனவே மருத்துவமனை வளாகத்தில் உரிய வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்.

கணவனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த மாது:- பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்கு அதிக கர்ப்பிணிகள் வருகின்றனர். எனவே இங்கு பிரசவ சிகிச்சை பிரிவை விரிவுபடுத்தி கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும். வைரஸ் காய்ச்சல் பரவும் நேரங்களில் இந்த மருத்துவமனைக்கு தினமும் சிகிச்சை பெற வருபவரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டுகிறது. இத்தகைய நேரங்களில் கூடுதல் மருத்துவ பணியாளர்களை நியமித்து சிகிச்சை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்