< Back
மாநில செய்திகள்
பக்ரீத் பண்டிகை:வாடிப்பட்டி, டி.கல்லுப்பட்டி சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை
மதுரை
மாநில செய்திகள்

பக்ரீத் பண்டிகை:வாடிப்பட்டி, டி.கல்லுப்பட்டி சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

தினத்தந்தி
|
28 Jun 2023 3:14 AM IST

பக்ரீத் பண்டிகையையொட்டி வாடிப்பட்டி, டி.கல்லுப்பட்டி சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.

வாடிப்பட்டி,

பக்ரீத் பண்டிகையையொட்டி வாடிப்பட்டி, டி.கல்லுப்பட்டி சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.

ரூ.2 கோடிக்கு விற்பனை

வாடிப்பட்டி பஸ் நிலையம் அருகில் செவ்வாய்க்கிழமை தனியார் வாரச்சந்தை உள்ளது. இந்த சந்தையில் ஆடு, மாடு, கோழி மற்றும் காய்கறிகள் விற்கப்படுகிறது. இந்த சந்தைக்கு மதுரை, திண்டுக்கல், தேனி, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து வியாபாரிகளும் விவசாயிகளும் வந்து செல்கின்றனர். ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 8 மணி வரை சந்தை செயல்படும். இதில் ஆடு, மாடு, கோழிகள் காலை 5 மணிக்கு தொடங்கி 9 மணிக்குள் முடிந்து விடும். அதன் பின் காய்கறி, பலசரக்கு வீட்டு உபயோக பொருட்கள் வியாபாரங்கள் மட்டும் தொடர்ந்து விற்பனையாகும். இந்நிலையில் நாளை (வியாழக்கிழமை) பக்ரீத் பண்டிகை வருவதை யொட்டி கிராமப் புறங்களில் இருந்து ஏராளமான கருப்பு ஆடு, வெள்ளாடு, செம்மறி ஆடுகள் வந்திருந்தது. இதனால் விற்பனை மும்முரமாக இருந்தது. ரூ.10 ஆயிரம் தொடங்கி ரூ.30 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனையானது இதனால் ரூ.2 கோடி வரை வியாபாரம் நடந்தது.

ஆட்டுச்சந்தை

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் திருமங்கலம்- ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டு சந்தை உள்ளது. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் சந்தை நடைபெறும். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நேற்று நடந்த சந்தையில் அதிக அளவிலான ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.

பேரையூர், டி.கல்லுப்பட்டி, சுற்றியுள்ள கிராம பகுதிகள், விருதுநகர் மாவட்டம் புலிகுறிச்சி, எரிச்சநத்தம், திருமங்கலம், திருப்பரங்குன்றம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.

ரூ.1 கோடிக்கு விற்பனை

இந்த ஆடுகளை விலைக்கு வாங்குவதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வேன்களில் வந்து குவிந்தனர்.இதனால் இங்குள்ள ஆட்டுசந்தை களைகட்டி காணப்பட்டது. நேற்று காலை 5 மணி முதல் ஆடுகள் விற்பனை தொடங்கியது. ஆடுகளை வாங்கும் வியாபாரிகள் ஆட்டின் குறுக்குப் பகுதியை கை வைத்து பிடித்து மதிப்பீடு செய்து அதன் பின்பு விலை நிர்ணயம் செய்து வாங்கி சென்றனர். அதிக அளவு செம்மறி ஆடுகள் விற்பனையானது.

சிறிய ஆடுகள் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனையானது. பெரிய ஆடுகள் ரூ.12 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விலை போனது. ஆடுகள் விற்பனை செய்தவர்கள் தங்களுக்கு கட்டுப்படியான விலைக்கு விற்றதால் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று மட்டும் டி.கல்லுப்பட்டி ஆட்டு சந்தையில் ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானது என்று வியாபாரிகள் கூறினார்கள்.

Related Tags :
மேலும் செய்திகள்