தஞ்சாவூர்
சித்திரை திருவிழா பந்தக்கால் முகூர்த்தம்
|சித்திரை திருவிழா பந்தக்கால் முகூர்த்தம்
தஞ்சை பெரியகோவிலில் சித்திரை திருவிழாவுக்கான பந்தக்கால் நடப்பட்டது. அடுத்த மாதம்(ஏப்ரல்) 17-ந் தேதி கொடியேற்றமும், மே 1-ந் தேதி தேரோட்டமும் நடக்கிறது.
சித்திரை திருவிழா
மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரியகோவில் ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாக நிற்கிறது. பல்வேறு சிறப்புகளை கொண்ட தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் 18 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா அடுத்த மாதம்(ஏப்ரல்) 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து விழா நாட்களில் சாமி புறப்பாடு, சிறப்பு பூஜைகள் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மே 1-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.
பந்தக்கால் முகூர்த்தம்
சித்திரை திருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் தஞ்சை பெரியகோவிலில் உள்ள பெரியநாயகி அம்மன் சன்னதி முன்பு நேற்று காலை நடந்தது. பந்தக்காலுக்கு பால், தயிர், மஞ்சள் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு சிவாச்சாரியார் அபிஷேகம் செய்தார்.
பின்னர் வேதமந்திரங்களுடன் தேவாரம், திருமுறைகள் பாடப்பட்டு, அம்மன் சன்னதி முன்பு பந்தக்கால் நடப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து சிவாச்சாரியார் தீபாராதனை காண்பித்து வழிபாடு செய்தார்.
இதில் அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர் மாதவன், மேற்பார்வையாளர்கள் செந்தில், ரெங்கராஜ் மற்றும் சிவாச்சாரியார்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.