திருச்சி
பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி
|பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடந்தது.
திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பாக 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது. 268 மாணவ-மாணவிகள் போட்டியில் கலந்து கொண்டனர். ஓவியப்போட்டி 1, 2, 3-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு ஒரு பிரிவாகவும், 4, 5, 6-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு ஒரு பிரிவாகவும், 7, 8, 9-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு ஒரு பிரிவாகவும் மற்றும் சிறப்பு குழந்தைகளுக்கு ஒரு பிரிவாகவும் நடைபெற்றது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசும், ஒவ்வொரு பிரிவிலும் 2 ஆறுதல் பரிசுகளும், பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்பட்டன. போட்டியில் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.
முன்னதாக இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற மாநகராட்சி பொறியாளர் அமுதவல்லி தலைமை தாங்கினார். மாவட்ட நூலக அலுவலர் சிவகுமார் ஓவியப்போட்டியை தொடங்கி வைத்தார். வாசகர் வட்டத்தலைவர் கோவிந்தசாமி வாழ்த்தி பேசினார். ஓய்வு பெற்ற தேசிய தொழில்நுட்ப கழக பேராசிரியர்கள் மாணிக்கவாசகம், ராகவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முடிவில் மாவட்ட மைய நூலக முதல் நிலை நூலகர் தனலட்சுமி நன்றி கூறினார்.