கடலூர்
பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி வடலூரில் நாளை நடக்கிறது
|பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி நாளை வடலூரில் நடக்கிறது.
கடலூர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் 'அரும்புகள்' என்ற சிறப்பான சேமிப்பு கணக்கு திட்டத்தை தொடங்குவதற்காகவும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், மாபெரும் ஓவியப் போட்டி 3 வயது முதல் 18 வயது வரை உள்ள பள்ளி மாணவ-மாணவிகளுக்காக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி வடலூரில் உள்ள வள்ளலார் குருகுலம் மேல் நிலைப்பள்ளியில் தூரிகை 2023 ஓவியப்போட்டி நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.
இதில் முதல் பிரிவில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., மற்றும் 2-வது பிரிவில் 1, 2-ம் வகுப்பும், 3-வது பிரிவில் 3 முதல் 6-ம் வகுப்பு வரையும், 4-வது பிரிவில் 7, 8-ம் வகுப்பும், 5-வது பிரிவில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையும் தனித்தனியாக ஓவியப்போட்டி நடத்தப்படுகிறது. இந்த ஓவிய போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ-மாணவிகள், வங்கியின் விளம்பர பலகை, பள்ளியின் விளம்பர பலகை மற்றும் வாட்ஸ்-அப் மூலமாகவும், நோட்டீசில் உள்ள கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்தும், ஆன்லைனில் விண்ணப்பித்து போட்டியில் கலந்து கொள்ளலாம்.
இவ்வாறு மேற்கண்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.