நாமக்கல்
கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான ஓவியப்போட்டி
|நாமக்கல்லில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான ஓவியப்போட்டி நடைபெற்றது.
இந்திய அரசு தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ், சென்னையில் செயல்பட்டு வரும், மத்திய மக்கள் தொடர்பகத்தின் சார்பில் நாமக்கல்லில் 5 நாட்கள் இந்திய சுதந்திரத்தின் 75-ம் ஆண்டு அமிர்தப் பெருவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான ஓவியப் போட்டி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நேற்று நடந்தது.
இப்போட்டியில், 'சுதந்திரமும் பெண்கள் முன்னேற்றமும்' என்ற தலைப்பில், வாட்டர் கலர் ஓவியங்களை மாணவ, மாணவிகள் வரைந்தனர். இதில் நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம், குமாரபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த கல்லுாரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற நபர்களுக்கு முதல் பரிசு ரூ.2 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.1,000, மூன்றாம் பரிசு ரூ.500 மற்றும் இரண்டு ஆறுதல் பரிசு தலா ரூ.250 மற்றும் சான்றிதழ்களை இன்று (வெள்ளிக்கிழமை) மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி முருகன் வழங்குகிறார்.