< Back
மாநில செய்திகள்
தம்பதியை அரிவாளால் வெட்டிய பெயிண்டர் போலீசில் ஒப்படைப்பு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

தம்பதியை அரிவாளால் வெட்டிய பெயிண்டர் போலீசில் ஒப்படைப்பு

தினத்தந்தி
|
9 Jan 2023 12:00 AM IST

பெரம்பலூர் அருகே மது போதையில் தம்பதியை அரிவாளால் வெட்டிய பெயிண்டரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

கல்லை எடுத்து வீசினார்

பெரம்பலூர் அருகே குரும்பலூர் 3-வது வார்டுக்குட்பட்ட ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் பிச்சை பிள்ளை (வயது 49). இவரது மனைவி அமுதவள்ளி (42). இவர் நேற்று காலை வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மூப்பனார் கோவில் தெருவில் நடந்து வந்து கொண்டிருந்த அமுதவள்ளியின் மீது, ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த கண்ணன் (45) என்பவர் மது போதையில் கல்லை எடுத்து வீசியுள்ளார்.

இதனை தட்டி கேட்ட அமுதவள்ளியையும், அவரது கணவர் பிச்சை பிள்ளையும் கண்ணன் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

தம்பதிக்கு அரிவாள் வெட்டு

இதில் அதிருப்தி அடைந்த கண்ணன் தனது வீட்டிற்கு சென்று அரிவாளை எடுத்து வந்து பிச்சை பிள்ளையையும், அமுதவள்ளியையும் வெட்டியுள்ளார். இதனை தடுக்க முயன்ற கண்ணனின் தாய் ருக்மணியை கண்ணன் கீழே தள்ளிவிட்டதில், அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதில் இடது கையில் வெட்டு காயமடைந்த பிச்சைபிள்ளை, அமுதவள்ளி ஆகியோரை அக்கம், பக்கத்தினர் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் பொதுமக்கள் கண்ணனை பிடித்து தர்ம அடி கொடுத்து பெரம்பலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். கண்ணனுக்கும் லேசான காயம் ஏற்பட்டதால் போலீசார் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர்.

போலீசார் விசாரணை

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கண்ணன் கடந்த 15 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக மனைவி, மகனை விட்டு பிரிந்து தாயுடன் வசித்து வருகிறார். மேலும் பெயிண்டர் வேலைக்கு சென்று வந்த அவர் மது குடிக்கும் பழக்கத்திற்கும் அடிமையானார்.

மது போதையில் அவர் அடிக்கடி ஊர்க்காரர்களிடம் பிரச்சினையில் ஈடுபட்டு வந்துள்ளது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்