திருச்சி
கத்தரிக்கோலால் குத்தி பெயிண்டர் கொலை
|கத்தரிக்கோலால் குத்தி பெயிண்டர் கொலை செய்யப்பட்டார்.
சோமரசம்பேட்டை:
பெயிண்டர்
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள பள்ளக்காடு கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 50). இவரது மனைவி பங்கஜவல்லி (47). இவர்களுக்கு 3 மகன்கள் உண்டு. இதில் மூத்த மகன் ஆகாஷ் என்ற செல்வமாரி (19). பெயிண்டரான இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தாயனூரை சேர்ந்த அகிலா (21) என்ற பெண்ணை ஆகாஷ் காதலித்து, திருமணம் செய்துள்ளார். தற்போது அகிலா 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். மேலும் ஆகாசுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதையடுத்து, அகிலா தாயனூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதையடுத்து ஆகாஷ் தனது வீட்டிலும், தனது மனைவி வீட்டிலும் மாறி மாறி தங்கி வந்துள்ளார்.
வயலில் பிணம்
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது மனைவியை பார்க்க செல்வதாக தனது தாயாரிடம் கூறிவிட்டு ஆகாஷ் சென்றுள்ளார். நேற்று அதிகாலை புங்கனூர் பெரிய ஏரிக்கு அருகில் உள்ள வயலில் முகம் மற்றும் கை, கால்களில் காயங்களுடன் ஆகாஷ் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சோமரசம்பேட்டை இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு, ஆகாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தை திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், ஜீயபுரம் துணை சூப்பிரண்டு பரவாசுதேவன் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
குத்திக்கொலை
முதற்கட்ட விசாரணையை தொடர்ந்து ஆகாஷ் கத்தரிக்கோலால் குத்திக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மது குடித்தபோது ஏற்பட்ட தகராறில் ஆகாஷ் கொலை செய்யப்பட்டாரா? என்பது உள்ளிட்ட கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
தாயனூரில் கடந்த 7-ந் தேதி அக்கம்மாள் என்ற மூதாட்டி நகைக்காக கொல்லப்பட்ட நிலையில், தற்போது அருகே உள்ள கிராமத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.