சென்னை
கீழ்ப்பாக்கத்தில் தாறுமாறாக ஓடிய கார் மோதி பெயிண்டர் பலி - மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை
|கீழ்ப்பாக்கத்தில் தாறுமாறாக ஓடிய கார் மோதி பெயிண்டர் பலியானார். மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை ஓட்டேரியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 47). இவர், சவுகார்பேட்டையில் கெமிக்கல் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை தனது காரில் கீழ்ப்பாக்கம் அலகாபாத் சாலை வழியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் தாறுமாறாக ஓடியது. எதிரே சாலை ஓரத்தில் நடந்து வந்து கொண்டிருந்த ஒருவர் மீதும், அங்கு அமர்ந்திருந்த மற்றொருவர் மீதும் வேகமாக மோதியது. இதில், இருவரும் தூக்கி விசப்பட்டனர். மேலும் 3 இருசக்கர வாகனங்கள் மற்றும் சாலை அருகில் நின்றிருந்த திலிப்குமார் என்பவரது ஆட்டோவிலும் மோதி நின்றது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அருகில் இருந்தவர்கள் விபத்தில் காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அதில் ஒருவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்துவந்த அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார், விபத்தை ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து, காரை ஓட்டிவந்த ஜெயக்குமாரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். ஜெயக்குமார் ஓட்டி வந்த கார், தானியங்கி கார் என்பதும், பிரேக் பிடிப்பதற்கு பதிலாக அவர் ஆக்சிலேட்டரை வேகமாக அழுத்தியதால் கார் அவரது கட்டுப்பாட்டை மீறி விபத்துக்குள்ளானதும் தெரிய வந்தது.
மேலும் விபத்தில் பலியானவர், புரசைவாக்கம் பகுதியை சேர்ந்த பழனி (49)என்பதும், பெயிண்டராக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. மளிகை பொருட்கள் வாங்க வந்த பழனி, சாலை ஓரத்தில் அமர்ந்துகொண்டு தனது நண்பருடன் பேசி கொண்டிருந்தபோது கார் மோதி பலியானதும் தெரியவந்தது.
அவருடைய உடல் கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை முடிந்து அவருடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பழனியின் உடலை பார்த்து அவருடைய மனைவி மகேஸ்வரி கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் மற்றொருவர் கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த எஸ்வன் சீசா (71) என்பதும், விபத்தில் அவரது வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. காரை ஓட்டி வந்த ஜெயக்குமார் மீது அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணம் ஏற்படுத்துதல் உள்பட 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சாலையில் தாறுமாறாக ஓடிய கார் சாலையில் நடந்து சென்றவர் மீது மோதி தூக்கி வீசப்படும் காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. நெஞ்சை பதை பதைக்க வைக்கும் இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.