< Back
மாநில செய்திகள்
மனைவியை கொலை செய்த பெயிண்டருக்கு ஆயுள் தண்டனை
மாநில செய்திகள்

மனைவியை கொலை செய்த பெயிண்டருக்கு ஆயுள் தண்டனை

தினத்தந்தி
|
13 Oct 2023 11:42 PM IST

மனைவியை கொலை செய்த பெயிண்டருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பெயிண்டர்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள ஊத்துப்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 44). பெயிண்டர். இவரது மனைவி கண்ணம்மாள். இவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சுப்பிரமணி தினமும் மது அருந்திவிட்டு வந்து கண்ணம்மாளை திட்டி அடித்து வந்துள்ளார்.

இதனால் கண்ணம்மாள் கோபித்துக் கொண்டு, அவரது தம்பி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இருவரையும் சமாதானம் செய்து சேர்ந்து வாழ அறிவுறுத்தியுள்ளனர்.

மனைவி கொலை

இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ந்தேதி கணவன், மனைவிக்கும் இடையே மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சுப்பிரமணி, கண்ணம்மாளை தகாத வார்த்தைகளால் திட்டி, இரும்பு குழாயால் அவரது தலையில் அடித்துள்ளார்.

இதில் பலத்த காயம் அடைந்த கண்ணம்மாள், கரூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். இந்தநிலையில் அதே மாதம் 27-ந்தேதி சிகிச்சை பலனின்றி கண்ணம்மாள் இறந்து விட்டார்.

ஆயுள் தண்டனை

இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து, விசாரணை மேற்கொண்டு சுப்பிரமணியை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் விசாரணை முடிந்து இவ்வழக்கில் நீதிபதி நசீமாபானு நேற்று தீர்ப்பு வழங்கினார்.

இதில், கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாத சிறைத்தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தார்.

மேலும் செய்திகள்