திருவள்ளூர்
திருநின்றவூர் அருகே மின்சாரம் தாக்கி பெயிண்டர் சாவு
|திருநின்றவூர் அருகே மின்சாரம் தாக்கி பெயிண்டர் பரிதாபமாக இறந்தார்.
திருநின்றவூர் அடுத்த நடுக்குத்தகை அருந்ததிபாளையம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 33). பெயிண்டர். நேற்று முன்தினம் இரவு இவர் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார்.
அப்போது வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருப்பதை அறிந்து அவரது தாயாரிடம் இது குறித்து விசாரித்தார். அப்போது அவரது தாயார் மின்சார வயர் அறுந்து கிடப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து நாகராஜ் அதை சரி செய்வதற்காக பிளாஸ்டிக் டேப் எடுத்து சென்று அறுந்து கிடந்த வயரை சரிசெய்ய முற்பட்டார். அப்போது அவர் மின்சாரம் தாக்கி அங்கிருந்து தூக்கி வீசப்பட்டார்.
இதையடுத்து மின்சாரம் தாக்கி சுயநினைவின்றி கிடந்த நாகராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு டாக்டர்கள் நாகராஜை பரிசோதித்து பார்த்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.