திருவள்ளூர்
கடன் தொல்லையால் பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை
|கடன் தொல்லையால் மனஉளைச்சல் அடைந்த பெயிண்டர் மனைவியிடம் குழந்தையை நன்றாக பார்த்துகொள்ளும்படி செல்போனில் கூறிவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவொற்றியூர் ஏக வல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தனுஷ்கோடி என்கிற கணேஷ் (வயது 24) பெயிண்டர். இவரது மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளதால் அவர் பெரியார் நகரில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கணேசுக்கு கடன் தொல்லை இருந்து வந்துள்ளது. இதனால் கடந்த 3 மாதங்களாக வீட்டு வாடகையும் கொடுக்காமல் இருந்ததாக தெரிகிறது. நேற்று வீட்டு உரிமையாளர் கணேசிடம் வாடகை பணத்தை கேட்டார். கனேஷ் வாடகை பணத்தை சீக்கிரம் தந்து விடுகிறேன் என தெரிவித்தார்.
வீட்டு வாடகை கொடுக்க முடியாத சூழ்நிலையாலும் கடன் பிரச்சினையாலும் மன உளைச்சலுக்கு ஆளான கணேஷ் தன் மனைவியுடன் செல்போனில் தொடர்பு கொண்டு குழந்தையை நன்றாக பார்த்துக்கொள் என்று கூறிவிட்டு செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார்.
இதனால் சந்தேகம் அடைந்த கணேசின் மனைவி செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சி செய்தபோது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து அவருடைய மாமனார் வீட்டிற்கு சென்று பார்த்தபோது கணேஷ் வீட்டில் உள்ள மின்விசிறியில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
தகவல் அறிந்த திருவொற்றியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கணேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.