< Back
மாநில செய்திகள்
பைங்காட்டூர் பாசன வாய்க்காலை தூர்வார வேண்டும்
திருவாரூர்
மாநில செய்திகள்

பைங்காட்டூர் பாசன வாய்க்காலை தூர்வார வேண்டும்

தினத்தந்தி
|
24 Sep 2023 6:45 PM GMT

கோட்டூர் அருகே பைங்காட்டூர் பாசன வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

கோட்டூர்:

கோட்டூர் அருகே பைங்காட்டூர் பாசன வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

பாசன வாய்க்கால்

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பைங்காட்டூர், வாலிஓடை, தென்பாதி, கடைத்தெரு, சோத்திரியம் ஆகிய கிராமங்களில் சுமார் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் அப்பகுதி விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு பாசனத்திற்காக கோரையாற்றில் மருதூர்பிள்ளையார் கோவிலடியிலிருந்து எக்கல், கண்டக்கரையான் வழியாக பைங்காட்டூர் வரை சுமார் 5 கிலோ மீட்டர் வரை உள்ள தூரத்திற்கு பாசன வாய்க்கால் செல்கிறது.

இந்த நிலையில் இந்த பாசன வாய்க்கால் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. இந்த பாசன வாய்க்காலில் செடி, கொடிகளும், முள் செடிகளும் மண்டி உள்ளன. மேலும் வாய்க்காலின் நடுவில் மணல் திட்டுகள் ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் செல்வதில் தடை ஏற்படுகிறது.

தொட்டிப்பாலம்

இந்த பாசன வாய்க்காலில் வாலிஓடை கிராமத்தில் தொட்டிப்பாலம் கட்டப்பட்டு தண்ணீர் சென்று கொண்டிருந்தது. இந்த தொட்டிப்பாலம் தற்போது உடைந்து தண்ணீர் முழுவதும் வேறு வாய்க்காலில் செல்கிறது. இதை தடுக்க விவசாயிகள் மணல் மூட்டைகள் மற்றும் மரக்கட்டைகளால் தடுப்பனை ஏற்படுத்தியுள்ளனர்.

ஆனாலும் அந்த தடுப்புகள் பலன் அளிக்கவில்லை. இதுகுறித்து பலமுறை வேளாண்மை துறை அதிகாரிகளுக்கும், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் நேரில் சென்று மனு கொடுத்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தூர்வார வேண்டும்

இதனால் இந்த ஆண்டு ஆயிரம் ஏக்கருக்கு மேல் குறுவை நெல் நேரடி விதைப்பு செய்த பயிர்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் கருகி விட்டது. இப்போது சம்பா சாகுபடிக்காக உழவு செய்துள்ளோம். இதனால் விவசாயிகளுக்கு பொருளாதார நஷ்டம் ஏற்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பைங்காட்டூர் கடைத்தெரு பாசன வாய்க்காலை நேரில் பார்வையிட்டு தூர்வார வேண்டும். மேலும் தொட்டிப்பாலத்தை சீரமைத்து சாகுபடிக்கு தங்கு தடையின்றி தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்