< Back
மாநில செய்திகள்
வவ்வால் கடித்ததால் வந்த பாதிப்பு... மாணவியை தாக்கிய நிபா வைரஸ்..!!
மாநில செய்திகள்

வவ்வால் கடித்ததால் வந்த பாதிப்பு... மாணவியை தாக்கிய நிபா வைரஸ்..!!

தினத்தந்தி
|
13 Sept 2023 5:46 PM IST

திருவனந்தபுரத்தில் பல் மருத்துவ மாணவிக்கு நிபா வைரஸ் பாதிப்பு அறிகுறி தென்பட்டதை அடுத்து, மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த 2018-ம் ஆண்டு உயிர்க்கொல்லி நோயான நிபா வைரஸ் பாதித்து 17 பேர் வரை உயிரிழந்தனர். அப்போது இது பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒருவர், 2 பேர் என பாதித்து சிகிச்சை பெற்றனர்.

இந்தநிலையில் கோழிக்கோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் காய்ச்சலால் பாதித்து சிகிச்சை பெற்று வந்த 49 வயது மதிக்கத்தக்க ஒருவர் கடந்த மாதம் 30-ந்தேதி உயிரிழந்தார். இதேபோல கடந்த 10-ந்தேதி அதே ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 40 வயது மதிக்கத்தக்க ஒருவரும் உயிரிழந்தார்.

நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக இருவர் உயிரிழந்த நிலையில்,மேலும் 2 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது. அவர்கள் 4 பேருடன் தொடர்பில் இருந்த 126 பேர், கேரள சுகாதாரத்துறை கண்காணிப்பில் உள்ளனர். கோழிக்கோட்டில் நிபா அறிகுறியால் சிகிச்சை பெற்று வந்த 3 பேரின் ஆய்வு முடிவுகள் நெகட்டிவ் என தெரியவந்துள்ளது.

நிபா வைரஸ் பாதிக்கப்பட்ட 7 பஞ்சாயத்துகளில் உள்ள 42 வார்டுகள் கட்டுப்பாட்டு மண்டலமாக மாற்றப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் தடை விதிக்கப்பட்டு, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதுடன், ஆன்லைன் வகுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, திருவனந்தபுரத்தில் பல் மருத்துவ மாணவிக்கு நிபா வைரஸ் பாதிப்பு அறிகுறி தென்பட்டதை அடுத்து, மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தன்னை வவ்வால் கடித்ததாக மருத்துவர்களிடம் மாணவி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த மாணவியுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைபடுத்தி கண்காணித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்