தேனி
கூடலூரில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும்:கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை
|கூடலூரில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும், பொதுமக்கள் சிலரும் நேற்று மனு கொடுக்க வந்தனர். மாவட்ட கலெக்டர் ஷஜீவனாவிடம் அவர்கள் கோரிக்கை மனுவை கொடுத்தனர். அதன்படி, கூடலூர் நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் விவசாயிகள் கொடுத்த மனுவில், "கூடலூர் பகுதியில் சுமார் 3,100 ஏக்கரில் நெல் பயிரிடப்படுகிறது.
கூடலூரில் பல ஆண்டுகளாக ஒவ்வொரு போகத்திலும் சுமார் 1 லட்சம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டன. ஆனால், கடந்த ஆண்டு மின்வசதி ஏற்பாடு இல்லாததால் 5 ஆயிரம் மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டன. இதனால், விவசாயிகளை விட வியாபாரிகளே பலன் அடைந்தனர். எனவே, கூடலூரில் உள்ள அரசுக்கு சொந்தமான சேமிப்பு கிட்டங்கியிலும், தரிசாக உள்ள அரசு விதைப் பண்ணை இடத்திலும் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். அங்கு விவசாயிகள் மட்டுமே பயன்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.
இதேபோல், ஜெயமங்கலம் காந்திநகரை சேர்ந்த மக்கள், தமிழக அமைப்புசாரா தெருவோர சிறுவியாபாரிகள் முன்னேற்ற சங்க மாநில தலைவர் ராசாமுருகேசன் தலைமையில் நிர்வாகிகள், அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் ஹக்கீம் ஆகியோர் தங்களது கோரிக்கைகள் குறித்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.