< Back
மாநில செய்திகள்
நெல் அறுவடை எந்திர விவரங்கள் உழவன் செயலியில் பதிவேற்றம் -  காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

நெல் அறுவடை எந்திர விவரங்கள் உழவன் செயலியில் பதிவேற்றம் - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர்

தினத்தந்தி
|
26 Feb 2023 4:39 PM IST

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நெல் அறுவடை எந்திரங்கள் தொடர்பான விவரங்கள் உழவன் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

கலந்தாலோசனை கூட்டம்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், வேளாண் சார்ந்த அலுவலர்கள், தனியார் நெல் அறுவடை எந்திரங்களின் உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் உள்ளிட்டோர்களுடன் கலந்தாலோசனை கூட்டம் கடந்த 17-ந்தேதி காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் நெல் அறுவடை எந்திரங்களின் வாடகை முறைப்படுத்தப்பட்டுள்ளது.

தனியார் நெல் அறுவடை எந்திரம் பெல்ட் டைப் அறுவடை எந்திரத்துக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.2 ஆயிரத்து 600 மற்றும் டயர் டைப் எந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1850 என வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

உழவன் செயலியில்

நிர்ணயம் செய்யப்பட்ட வாடகை தொகைக்கு மிகாமல் தனியார் நெல் அறுவடை எந்திர உரிமையாளர்கள் வாடகை வசூலித்து எந்திரங்கள் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும், வேளாண்மை பொறியியல் துறை மூலம் காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு ஒரு நெல் அறுவடை எந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அரசு நெல் அறுவடை எந்திரம் பயன்படுத்த பெல்ட் டைப் எந்திரத்துக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1880, டயர் டைப் எந்திரத்துக்கு ரூ.1160 என அரசு நிர்ணயம் செய்துள்ளது.

ஆகவே, அரசு நெல் அறுவடை எந்திரம் மற்றும் 65 தனியார் நெல் அறுவடை எந்திர உரிமையாளர்கள் விவரம் உழவன் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

நெல் அறுவடை எந்திரம் தேவைப்படும் விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்து அதற்கான வாடகை தொகையை செலுத்தி அரசு மற்றும் தனியார் எந்திரங்களை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிர்ணயம் செய்யப்பட்டுள்ள தொகைக்கு கூடுதலாக வாடகை வசூலிப்பது குறித்து கீழ்கண்ட வேளாண் பொறியியல் துறை அலுவலகங்களின் தொலைபேசி மற்றும் செல்போன் எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம்.

1 செயற்பொறியாளர், (வே.பொ.து), நந்தனம், சென்னை 35, தொலைபேசி எண் 044 24327238, 9952952253. 2 காஞ்சீபுரம் உதவி செயற்பொறியாளர், (வே.பொ.து),

தொலைபேசி எண் 044 27230110, 9003090440.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்