விழுப்புரம்
நெல் அறுவடை எந்திர டிரைவர் மர்மசாவு
|திருவெண்ணெய்நல்லூர் அருகே நெல் அறுவடை எந்திர டிரைவர் மர்மமான முறையில் இறந்தார். அவர் கொலை செய்யப்பட்டதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவெண்ணெய்நல்லூர்,
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே காந்தலவாடி கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் செல்லதுரை (வயது 23) நெல் அறுவடை எந்திர டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடினர். இருப்பினும் அவர் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று அரசூர் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் உள்ள யோக ஆஞ்சநேயர் கோவில் பின்புறம் ரத்த காயங்களுடன் செல்லதுரை பிணமாக கிடந்தார். இது குறித்த தகவலின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் செல்லதுரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சாலை மறியல்
அப்போது அங்கிருந்த செல்லதுரையின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் செல்லதுரையின் உடலில் பல்வேறு இடங்களில் காயம் உள்ளது. இதனால் அவரை மர்மநபர்கள் அடித்து கொலை செய்து இருக்கலாம். எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்குள்ள திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் கூறுகையில், செல்லதுரை எப்படி இறந்தார் என்பது பற்றிய விவரம், பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகுதான் தெரியும். எனவே பிரேத பரிசோதனை முடிவு வந்தவுடன் அதன் அடிப்படையில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.