புதுக்கோட்டை
மழை இல்லாததால் காய்ந்த நெற்பயிர்கள்
|மழை இல்லாததால் நெற்பயிர்கள் காய்ந்தன.
ஆவுடையார்கோவில்:
மானாவாரி விவசாயம்
ஆவுடையார்கோவில் தாலுகா பகுதியை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் விவசாயத்தையே நம்பி வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் மானாவாரி விவசாயமே நடைபெறுகிறது. மழை முறையாக பெய்து கண்மாய்கள் நிரம்பினால்தான் விவசாயம் நடைபெறும். கண்மாய் இல்லாத பகுதிகள் வானம் பார்த்த பூமியாக உள்ளன.
விவசாய பணிகள் நடைபெறும் பகுதிகளில் பயிர்கள் வளர்ந்து அறுவடை வரையில் சரியான நேரத்தில் மழை தொடர்ந்தால்தான் விவசாயத்தின் மூலம் பயன் கிடைக்கும். மழை பொய்த்துவிட்டால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும்.
மழை பெய்யாததால்...
தற்போது பருவநிலை மாற்றத்தால் தகுந்த காலத்தில் மழை பெய்யாமல் பொய்த்து போவதாலும், அல்லது தேவையற்ற நேரத்தில் கடும் மழை பெய்வதாலும் விவசாயம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. கடந்த ஆண்டு பெய்த அதிக மழையின் காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்தனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு இப்பகுதியில் விவசாயிகள் நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். வயல்களில் கதிர்விடும் நிலையில் நெற்பயிர்கள் உள்ளன. ஆனால் சரியாக மழை பெய்யாததால், விளை நிலங்கள் வறண்டு காணப்படுகிறது. குறிப்பாக ஆவுடையார்கோவில் பிர்காவில் பிராந்தனி பகுதியில் கருங்காடு தும்பைமலர் கிராமம் உள்ளிட்ட பகுதிகளிலும், மீமிசல் பிர்கா சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் நெல் வயல்கள், உரிய பருவத்தில் மழை பெய்யாததால் வறண்டு போய்விட்டன.
விவசாயிகள் கவலை
இதனால் நெற்பயிர்கள் காய்ந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், பொதுவாக ஒரு ஏக்கரில் நெல் விவசாயம் செய்ய ரூ.30 ஆயிரம் வரை செலவாகிறது. மேலும் விவசாய இடுபொருட்களான விதை, உரம், பூச்சி மருந்து போன்றவற்றின் விலை அதிகரித்து வருகிறது.
இந்த ஆண்டு உரிய நேரத்தில் மழை பெய்யாததால் மேலும் நஷ்டமடைந்து, கடன் சுமை அதிகரிக்கும் நிலை உள்ளது. எனவே நெற்பயிர்களை அதிகாரிகள் பார்வையிட்டு, பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.