< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரியில் பாதயாத்திரை; ராகுல்காந்தி இன்று மாலை சென்னை வருகை
மாநில செய்திகள்

கன்னியாகுமரியில் பாதயாத்திரை; ராகுல்காந்தி இன்று மாலை சென்னை வருகை

தினத்தந்தி
|
6 Sept 2022 3:27 AM IST

கன்னியாகுமரியில் பாதயாத்திரையை தொடங்க உள்ள ராகுல்காந்தி, அதற்காக இன்று மாலை சென்னை வருகிறார். இதையொட்டி விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி வருகை

காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் நாளை(புதன்கிழமை) பாதயாத்திரையை தொடங்குகிறார். இதற்காக இன்று(செவ்வாய்க்கிழமை) மாலை 5.15 மணிக்கு டெல்லியில் இருந்து பயணிகள் விமானத்தில் புறப்பட்டு இரவு 8 மணியளவில் சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்து சேருகிறார்.

சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி சாா்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. சென்னையில் இரவு தங்கும் ராகுல் காந்தி, நாளை காலையில் சென்னையில் இருந்து காரில் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்துகிறார்.

பின்னர் அங்கிருந்து மீண்டும் காரில் சென்னைக்கு திரும்பி வருகிறார். காலை 11.40 மணிக்கு சென்னையில் இருந்து பயணிகள் விமானத்தில் ராகுல்காந்தி திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார்.

விமானத்தில் பாதுகாப்பு

ராகுல்காந்தி வருகையையொட்டி அவருக்கு அளிக்க வேண்டிய பாதுகாப்பு பற்றிய சிறப்பு ஆலோசனை கூட்டம் சென்னை விமான நிலையத்தில் நடந்தது. அதில் டெல்லியில் இருந்து வந்த சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள், சென்னை மாநகர போலீஸ் அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், மத்திய-மாநில உளவு பிரிவு அதிகாரிகள், விமான நிலைய அதிகாரிகள், விமான நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

ராகுல்காந்தி வருகையையொட்டி இன்று பிற்பகலில் இருந்து சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டது. முறையான அனுமதி பாஸ்கள் பெற்றவா்களை மட்டுமே விமான நிலையத்தில் ராகுல்காந்தியை வரவேற்க அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்