அரியலூர்
பச்சையம்மன் கோவில் கும்பாபிஷேகம்
|ஜெயங்கொண்டம் அருகே பச்சையம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் தெற்கு வழி கிராமத்தில் பிரசித்தி பெற்ற பச்சையம்மன் கோவில் உள்ளது. இங்கு மன்னார் சாமி, காத்தாயி அம்மன், பூங்காயி அம்மன், செல்வ விநாயகர், முருகன், அய்யப்பன், ஏழு முனிகள் உள்ளிட்ட தெய்வங்கள் உள்ளன. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழாவையொட்டி மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பூர்ணாகுதி, அங்குரார்ப்பணம், யாக பூஜை, தீபாராதனை, மருந்து சாத்துதல் ஆகியவை நடைபெற்றன. அதனைதொடர்ந்து வேத விற்பன்னர்கள் மந்திரங்களை ஓத கோவில் விமானங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பின்னர் மூலஸ்தானத்தில் தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இரவு 10 மணியளவில் அம்மன் வீதியுலா நடந்தது. கும்பாபிஷேகத்தை காண இளையோர் மேலவழி, கீழவெளி, மருதூர் தெற்குப்பட்டி, பொன்பரப்பி, மேலூர், புதுக்குடி, கரைமேடு, சூரிய மணல், துலாரங்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.