< Back
மாநில செய்திகள்
மலை கிராமத்தில் எருது கட்டும் திருவிழா
வேலூர்
மாநில செய்திகள்

மலை கிராமத்தில் எருது கட்டும் திருவிழா

தினத்தந்தி
|
6 July 2023 12:01 AM IST

ஒடுகத்தூர் அருகே மலை கிராமத்தில் எருது கட்டும் திருவிழா நடந்தது. இதில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

மலை வாழ் மக்கள்

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவில் ஜவ்வாது மலை தொடர்களில் சுமார் 84 மலை கிராமங்கள் உள்ளது. மேலும், ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை ஊராட்சியில் மட்டும் சுமார் 47 குக்கிராமங்கள் உள்ளது. அதேபோல், கட்டியான், அரசன், கோரி, தண்டன், வரடியான், பாவிரன், நாடான் உள்ளிட்ட இனங்களை சேர்ந்த மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களில், ஜமுனாமரத்தூர் மலை கிராமத்தை பூர்வீகமாக கொண்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட கட்டியாபட்டு, தேந்தூர், புதூர், புளியமரத்தூர், கோராத்தூர், சட்டாத்தூர், குப்சூர் என 12 கிராமங்களில் வசித்து வருகின்றனர்.

பாரம்பரிய திருவிழா

இங்கு, வசிக்கும் மலைவாழ் மக்களின் பாரம்பரிய திருவிழாக்களான புற்று கோவில் திருவிழா, காட்டு காளியம்மன் திருவிழா என ஒரே மாதத்தில் அடுத்தடுத்து நடைபெற்று வருகிறது.

அதன்படி, கடந்த மாதம் 15-ந் தேதி பெருமாள் வடிவிலான புற்று கோவில் திருவிழா நடைபெற்றது. தொடர்ந்து 29-ந் தேதி 100 ஆடுகளை பலியிட்டு காட்டு காளியம்மன் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

எருது கட்டும் விழா

அதன் தொடர்ச்சியாக நேற்று 12 கிராமங்களின் பாரம்பரிய திருவிழாவான எருது கட்டும் திருவிழா கட்டியாபட்டு கிராமத்தில் கொண்டாடப்பட்டது. இதற்காக, சுற்றியுள்ள மலை கிராமங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகளை அங்கு அமைக்கப்பட்டிருந்த 3 பெரிய மந்தையில் அடைத்து வைத்திருந்தனர்.

பின்னர், 12 கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் ஊர் பெரியோர்களின் காலில் விழுந்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, பாரம்பரிய முறையில் மந்தையில் அடைத்து வைத்திருந்த காளைகளை ஒவ்வொன்றாக கயிறுகட்டி மைதானத்திற்கு அழைத்து வந்து களைகளை தழுவி ஓட விட்டு விளையாடினர்.

மேலும் செய்திகள்