திருவள்ளூர்
காட்சி பொருளாக மாறிய மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி - பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை
|திருத்தணி நகராட்சியில் காட்சி பொருளாக மாறிய மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருத்தணி நகராட்சி 3-ம் வார்டுக்கு உட்பட்ட பி.எம்.எஸ்.நகர் பகுதியில் சுமார் 450-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதால் குடிநீர் பிரச்சினையை போக்குவதற்காக குடிநீர் தொட்டி அமைத்துத்தர வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2019-2020-ம் ஆண்டு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி கட்டப்பட்டது.
இந்த குடிநீர் தொட்டி கட்டப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பயன்பாட்டிற்கு கொண்டு வராமலே உள்ளது. தங்களது கோரிக்கைக்கு தீர்வு கிடைத்து விட்டது என்று மகிழ்ச்சியில் திளைத்த இந்தப் பகுதி மக்கள் கட்டி முடிக்கப்பட்ட நீர்தேக்க தொட்டி 2 ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் உள்ளதால் அந்த பகுதி மக்கள் மிகுந்த மனவேதனை அடைந்து உள்ளனர். எனவே வெறும் காட்சிப்பொருளாக காணப்படும் உயர்நிலை நீர்தேக்க தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.