திண்டுக்கல்
மாத கார்த்திகையையொட்டி பழனி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்
|மாத கார்த்திகை உற்சவ விழா, வார விடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
மாத கார்த்திகை உற்சவ விழா, வார விடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
கார்த்திகை உற்சவம்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். வாரவிடுமுறை, முகூர்த்தம், மாத கார்த்திகை, சஷ்டி உள்ளிட்ட விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்கின்றனர்.
இந்தநிலையில் இன்று வார விடுமுறை மற்றும் மாத கார்த்திகை உற்சவ விழா என்பதால், பழனியில் தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக வெளியூர் பக்தர்கள் நேற்று முன்தினமே பழனி பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் அறை எடுத்து தங்கினர். மேலும் நேற்று அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் பழனி கோவிலுக்கு படையெடுத்தனர்.
3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
இதனால் மலைக்கோவில், அடிவாரம், பாதவிநாயகர் கோவில், சன்னதிவீதி, திருஆவினன்குடி உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
கோவிலில் உள்ள தரிசன வழிகள், அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்லும் படிப்பாதை, யானைப்பாதை, மின்இழுவை ரெயில், ரோப்கார் ஆகியவற்றிலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். கூட்டம் காரணமாக கோவிலில் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
வாகன ஓட்டிகள் அவதி
வெளியூரில் இருந்து ஆயிரக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் பழனியில் படையெடுத்ததால் அடிவாரம் மட்டுமின்றி பஸ்நிலையம், குளத்துரோடு, திண்டுக்கல் ரோடு ஆகிய பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
பழனி பகுதியில் நேற்று காலை முதல் மதியம் வரை கடும் வெயில் சுட்டெரித்ததால், கோவில் வெளிப்பிரகாரத்தில் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் சிரமம் அடைந்தனர்.
மதியத்துக்கு பிறகு வருணபகவான் கருணை காட்டியதால், சுமார் 1 மணி நேரம் கனமழை பெய்தது. தொடர்ந்து விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. இதனால் மாலையில் இதயத்தை வருடும் இதமான சூழல் பழனியில் நிலவியது.
ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
பழனி அடிவாரம், நகர் பகுதியில் ஆக்கிரமிப்பால் ஞாயிற்றுக்கிழமை தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. குறிப்பாக திண்டுக்கல் ரோட்டில் நடைமேடையை தாண்டி சாலை வரையில் கடைக்காரர்கள் ஆக்கிரமித்து இருப்பதால் பாதசாரிகள் சாலையில் நடந்து செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதேபோல் வடக்கு கிரிவீதியில் வெயிலில் இளைப்பாற பக்தர்களுக்காக பந்தல் போடப்பட்டது. ஆனால் பாதை முழுவதையும் ஆக்கிரமித்து தள்ளுவண்டி கடைக்காரர்கள் கடை வைத்து உள்ளனர். இதனால் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் அடிவார பகுதியிலும் ஆக்கிரமிப்பு தலைவிரித்தாடுகிறது.
பழனியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்ற வேண்டும் என்று பலமுறை முறையிட்டும் கோவில், போலீஸ், நகராட்சி என யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே பழனியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.