திண்டுக்கல்
பழனி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்
|வாரவிடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு, தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வார விடுமுறை தினமான இன்று, பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக மலைக்கோவில், பாதவிநாயகர் கோவில், அடிவாரம், கிரிவீதி ஆகிய இடங்களில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர்.
இதேபோல் தரிசன வழிகள், மலைக்கோவில் செல்வதற்கான பாதைகள் ஆகிய இடங்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. தற்போது ரோப்கார் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணி நடப்பதால், அடிவாரத்தில் இருந்து மின்இழுவை ரெயிலில் மலைக்கோவிலுக்கு செல்ல பக்தர்கள் பலர் குவிந்தனர். இதனால் மின்இழுவை ரெயில்நிலையத்திலும் கூட்டம் அதிகமாக இருந்தது.
மலைக்கோவிலுக்கு சென்ற பக்தர்கள், சுமார் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவில் பிரகாரம், படிப்பாதை என பல இடங்களில் நின்று புகைப்படம் மற்றும் 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர்.