சென்னை
அய்யப்பன்தாங்கலில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் முட்டு அளவுக்கு தேங்கி நிற்கும் மழைநீர் - பொதுமக்கள் அவதி
|அய்யப்பன்தாங்கல் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் முட்டு அளவுக்கு மழைநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
சென்னை புறநகர் பகுதியில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல், ஈ.வி.பி.பார்க் அவென்யூ பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. தெருக்களில் முட்டு அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் வெளியே வரமுடியாமல் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.
அத்தியாவசிய தேவைகளுக்குகூட முட்டளவுக்கு தேங்கி நிற்கும் மழைநீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. தேங்கி நிற்கும் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்து இருப்பதால் சிறியவர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொளப்பாக்கம் ஊராட்சியில் மேக்ஸ்வொர்த் நகர், கணேஷ் நகர், ராமமூர்த்தி அவென்யூ, எம்.ஆர்.கே. நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அதில் வாகனங்கள் செல்லும்போது ஏற்படும் அலையால் தரை தளத்தில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் முன்னெச்சரிக்கையாக மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து உள்ளனர். தேங்கி நிற்கும் மழைநீரை ஆங்காங்கே மின் மோட்டார்கள் வைத்து வெளியேற்றும் பணியில் ஊராட்சி நிர்வாகம் ஈடுபட்டது.
சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட மதனந்தபுரம், வி.என்.டி.அவென்யூ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் தேங்கி வெள்ளம் போல் காட்சி அளிக்கிறது. குடியிருப்புகளை அதிக அளவில் வெள்ளம் சூழ்ந்து உள்ளதால் அந்த பகுதி முழுவதும் தனித்தீவு போல் காட்சி அளிக்கிறது.
தேங்கி உள்ள மழைநீரில் விஷப்பூச்சிகளும் ஊர்ந்து செல்வதால் மிகுந்த அச்சத்துடன் வசிப்பதாக அந்த பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
ஆவடியை அடுத்த கோவில்பதாகை ஏரி சுமார் 570 ஏக்கர் பரப்பளவில் நீர் நிறைந்து காணப்படுகிறது. தொடர் மழையால் இந்த ஏரி நிரம்பி உபரி நீரானது அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வீடுகளை சூழ்ந்து உள்ளது. கணபதி நகர் பகுதி வழியாக உபரி நீர் சாலைகளில் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் அங்குள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றி முழங்கால் அளவுக்கு மழை நீர் தேங்கி நிற்கிறது. கோவில்பதாகை முக்கிய சாலையிலும் மழைநீர் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.