< Back
மாநில செய்திகள்
சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் சாலை மறியல் 100-க்கும் மேற்பட்டோர் கைது.
சென்னை
மாநில செய்திகள்

சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் சாலை மறியல் 100-க்கும் மேற்பட்டோர் கைது.

தினத்தந்தி
|
13 July 2023 1:12 PM IST

தனியார் மயத்தை கண்டித்து சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மை பணியை தனியாரிடம் ஒப்படைப்பது என்று முடிவு செய்யப்பட்டு அரசாணை வெளியிட்டது. இதற்கு தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சி, ரிப்பன் மாளிகை கட்டிடம் முன்பு ஈ.வெ.ரா.பெரியார் சாலையில் செங்கொடி சங்கம் சார்பில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்தது. அப்போது, தூய்மை பணியை தனியாருக்கு கொடுக்கக்கூடாது, சம வேலைக்கு சம ஊதியம் தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

100 பேர் கைது

சாலை மறியலில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் நீண்டநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சென்டிரல் ரெயில் நிலையம் மற்றும் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி செல்பவர்கள் கடும் அவதி அடைந்தனர்.

இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

அப்போது, செங்கொடி சங்கத்தின் (சி.ஐ.டி.யு.) மாநில செயலாளர் திருவேட்டை நிருபர்களிடம் கூறியதாவது:-

போராட்டம் தொடரும்

மாநிலம் முழுவதும் தூய்மை பணிகளை தனியார் மயமாக்க 3 ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் உள்ளாட்சிகளில் நிரந்தர பணியே இல்லாமல் போகும். சென்னையில் உள்ள 11 மண்டலங்களில் குப்பை அள்ளும் பணி 2 பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் முறையாக குப்பை எடுப்பதில்லை.

இந்த நிலையில், எஞ்சியுள்ள 4 மண்டலங்களையும் தனியார்மயமாக்க மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. எனவே, தனியார் மயத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் மறியல் நடத்தப்பட்டது. தனியார் மய நடவடிக்கையால் சென்னையில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். தனியார் மயத்தை திரும்ப பெறும் வரை இந்த போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்