மதுரையில் போலி டிக்கெட்டுகளுடன் விமான நிலையத்திற்கு வந்த 100-க்கும் மேற்பட்ட பயணிகள் வெளியேற்றம்
|நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் போலி டிக்கெட்டுகளுடன் மதுரை விமான நிலையத்திற்கு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை,
மதுரையிலிருந்து அயோத்திக்கு சுற்றுலா செல்வதற்காக தனியார் விமானத்தில் முன்பதிவு செய்த நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் இன்று காலையில் மதுரை விமான நிலையம் வந்தனர். பாதுகாப்பு சோதனை முடிந்து அவர்கள் விமான நிலையத்திற்குள் சென்ற நிலையில், அங்கு அவர்களது டிக்கெட்டுகளை பரிசோதித்த தனியார் விமான நிறுவன அதிகாரிகள் அவ்வாறு எதுவும் புக்கிங் செய்யவில்லை என்றும் அந்த டிக்கெட்டுகள் போலியானது என்றும் தெரிவித்தனர்.
இதையடுத்து போலி விமான டிக்கெட்டுகளுடன் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பயணிகள் தங்களுக்கு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த ஏஜென்ட்-ஐ தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் "நான் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவில்லை, எனக்கு தெரிந்த ஒருவரிடம் சொல்லி செய்தேன். உடனடியாக இதுகுறித்து அவரிடம் விசாரித்து வேறு டிக்கெட் ஏற்பாடு செய்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பயணிகள் அனைவரும் மதுரை விமான நிலையத்திற்கு வெளியே காத்திருக்கின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் போலி டிக்கெட்டுகளுடன் மதுரை விமான நிலையத்திற்கு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.