< Back
மாநில செய்திகள்
அரசு ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் பிரிவு டாக்டர்கள் காலை 7.30 மணிக்கு பணிக்கு வர வேண்டும் - மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவு
சென்னை
மாநில செய்திகள்

அரசு ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் பிரிவு டாக்டர்கள் காலை 7.30 மணிக்கு பணிக்கு வர வேண்டும் - மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவு

தினத்தந்தி
|
6 July 2023 3:45 AM IST

அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள புறநோயாளிகள் பிரிவில் பணியாற்றும் டாக்டர்கள் காலை 7.30 மணிக்கு பணிக்கு வர வேண்டும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

அனைத்து மாநில மக்களுக்கும் சமமான, தரமான மருத்துவ சேவைகளை உலகளாவிய அளவில் வழங்குவது நமது மாநிலத்தின் முதன்மை நோக்கமாகும்.

இதை அடைவதற்கு அனைத்து அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிகள், அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருந்தகங்களில் சரியான நேரத்தில் சேவையை தொடங்குவது மிகவும் முக்கியான ஒன்றாகும்.

எனவே, சுகாதார சேவைகளை மக்கள் பெறுவதற்கு தேவையற்ற தாமதத்தை தவிர்க்கும் வகையில், டீன்கள், இணை இயக்குனர்கள் மற்றும் டாக்டர்கள் குறிப்பிட்ட நேரத்தில் பணிக்கு வருவதை மாவட்ட கலெக்டர்கள் தனிப்பட்ட கவனத்தில் எடுத்துக்கொண்டு கண்காணித்து உறுதி செய்ய வேண்டும். புறநோயாளிகள் பிரிவுகளில் சரியான நேரத்தில் டாக்டர்கள் வருவதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும், அரசு மருத்துவ கல்லூரி மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் பிரிவுகளில் பணிபுரியும் டாக்டர்கள் காலை 7.30 மணி முதல் மதியம் 12 மணி வரை ஆஸ்பத்திரியில் இருந்து நோயாளிகளை பார்க்க வேண்டும். இதேபோல, 24 மணி நேரமும் உள்நோயாளிகள் பிரிவை கவனிக்க தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

பிற டாக்டர்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை இருக்க வேண்டும். மருத்துவ அதிகாரி (ஆர்.எம்.ஓ.) காலை 7 மணிக்குள் வந்து புறநோயாளிகள் பிரிவை கண்காணிக்க வேண்டும்.

மருத்துவ கண்காணிப்பாளர் காலை 8 மணிக்கு பணியில் இருக்க வேண்டும். அவசரகால அடிப்படையில் 24 மணி நேரமும் தொடர்பில் இருக்க வேண்டும்.

இதேபோல, மாவட்ட தலைமை மற்றும் பிற அரசு ஆஸ்பத்திரிகளில், புறநோயாளிகள் பிரிவுகளில் பணிபுரியும் டாக்டர்கள் காலை 7.30 மணி முதல் பகல் 12 மணி வரை ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டும். 24 மணி நேர 'ஷிப்டு'களில் இருக்கும் டாக்டர்கள் மாலை 3 மணி முதல் 5 மணி வரை புறநோயாளிகளை பரிசோதனை செய்ய வேண்டும்.

பல் மற்றும் பிசியோதெரபி டாக்டர்கள் காலை 8 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையும் பணியில் இருக்க வேண்டும்.

தலைமை டாக்டர்கள் காலை 7.30 மணி முதல் 1.30 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையும் ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை பொறுத்தவரை, ஒன்று முதல் 3 மருத்துவ அதிகாரிகளை கொண்ட சுகாதார நிலையங்களில் காலை 9 மணி முதல் 4 மணி வரை டாக்டர்கள் புறநோயாளிகளை பார்க்க வேண்டும்.

5 மருத்துவ அதிகாரிகளை கொண்ட சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் ஷிப்டு அடிப்படையில் டாக்டர்கள் புறநோயாளிகளை பார்க்க வேண்டும்.

இந்த வழிகாட்டு நெறிமுறைகளை தங்கள் மாவட்ட ஆஸ்பத்திரிகளில் பின்பற்றுவதை கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்