தமிழகம் முழுவதும் இயக்கப்படும் காலாவதியான அரசு பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகள் இயக்க வேண்டும் - விஜயகாந்த்
|தமிழகம் முழுவதும் இயக்கப்படும் காலாவதியான அரசு பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகள் இயக்க வேண்டும் என விஜயகாந்த் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழகம் முழுவதும் இயக்கப்படும் காலாவதியான அரசு பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகள் இயக்க வேண்டும் என விஜயகாந்த் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் இருந்து புறப்பட்ட அரசு பேருந்தில் இருக்கை கழன்றதால் அதில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் பேருந்தில் இருந்து வெளியே விழுந்து படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசு பேருந்துகள் பராமரிப்பு விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக செயல்படுகிறது மிகவும் கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசு பேருந்துகள் போதிய பராமரிப்பு இன்றி பழுதடைந்த நிலையில் இயக்கப்பட்டு வருகின்றன. பல அரசு பேருந்துகளில் படிக்கட்டுகள், ஜன்னல் கம்பிகள், இருக்கைகள், மேற்கூரைகள் மட்டுமின்றி நடை பலகைகள் கூட பழுதான நிலையில் காணப்படுகின்றன. இதனால் அரசு பேருந்துகளில் அன்றாடம் பயணம் செய்யும் பயணிகள் உயிர் பயத்துடன் பயணிக்கின்றனர்.
மேலும் 50 சதவீத பேருந்துகளில் ஓட்டுனர்களின் இருக்கைகளும் பழுதடைந்து காணப்படுகின்றன. மழை காலத்தில் பேருந்திற்குள் மழைநீர் ஒழுகுவதால் பயணிகள் நனைந்து கொண்டே பயணிப்பதும், பேருந்து பழுதானால் பாதி வழியில் இறக்கி விடுவதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது. குறிப்பாக கடைகோடி மாவட்டமான கன்னியாகுமரியில் காலாவதியான அரசு பேருந்துகள் அதிகளவில் இருக்கை கழன்று விழும் அளவுக்கு தமிழக அரசின் பேருந்துகள் இருப்பது வேதனைக்குரியது.
தமிழக போக்குவரத்து கழகத்திறகு புதிதாக 1,771 பேருந்துகள் வாங்கப்படும் என அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். கன்னியாகுமரி மாவட்டத்தில் இயக்கப்படும் பழுதடைந்த பேருந்துகளை உடனடியாக திரும்ப பெற்று தற்போது புதிதாக வாங்க உள்ள அரசு பேருந்துகளை முன்னுரிமை அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல் இல்லாமல் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்வதற்கு முன்பே தமிழகம் முழுவதும் இயக்கப்படும் காலாவதியான அரசு பேருந்துகளை மாற்றி, மக்கள் பாதுகாப்பாக பயணிக்க புதிய பேருந்துகளை இயக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.