திண்டுக்கல்
'ஓ.டி.டி. தளங்களால் தான் சிறிய பட்ஜெட் படங்கள் தப்பிக்கின்றன'
|ஓ.டி.டி. தளங்களால் தான் சிறிய பட்ஜெட் படங்கள் தப்பிக்கின்றன என்று பழனி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த நடிகர் ராதாரவி கூறினார்.
பழனி முருகன் கோவிலில் நடிகர் ராதாரவி சாமி தரிசனம் செய்தார். பின்னர் தங்கரத புறப்பாட்டில் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபட்டார். முன்னதாக அடிவாரத்தில் இருந்து மின்இழுவை ரெயில் மூலம் மலைக்கோவிலுக்கு சென்று தரிசனம் முடித்துவிட்டு மீண்டும் மின்இழுவை ரெயிலில் அடிவாரம் வந்தார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே ஆன்மிக பூமிதான். சினிமாவில் ஒருசிலரின் ஆதிக்கம் எப்போதும் உள்ளது. தெலுங்கு சினிமாவில் சிண்டிகேட் மூலம் தான் படம் எடுத்து வெளியிடுகிறார்கள். பெரிய பட்ஜெட் படம் வரும்போது சிறிய படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில்லை. ஓ.டி.டி. தளங்கள் இருப்பதால்தான் சிறிய பட்ஜெட் படங்கள் தப்பிக்கின்றன. வரும் காலங்களில் ஓ.டி.டி. தளத்தால் பெரிய ஹீரோக்களுக்கான மாஸ் குறைய வாய்ப்பு உள்ளது. அதாவது ஹீரோக்களுக்கான பாலாபிஷேகம், திரும்ப திரும்ப பார்க்கும் வழக்கம் ஆகியவை குறைய வாய்ப்பு உள்ளது.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சிறந்த அரசியல் தலைவராக உள்ளார். பத்திரிகையாளர்களை திறம்பட கையாள்வதால்தான் தொடக்க காலத்தில் அவருக்கு எதிரான கருத்து உடையவர்கள் தற்போது நடுநிலைக்கு வர தொடங்கி உள்ளனர். நடிகர் பயில்வான் ரங்கநாதன் யாரை விமர்சனம் செய்கிறாரோ, சம்பந்தப்பட்டவர்கள் வழக்கு தொடரலாமே. எல்லாமே வியாபாரம் தான் என்று அவர் தான் சொல்லியிருக்கிறாரே. இவ்வாறு அவர் கூறினார்.