மாற்று அரசியல் மக்கள் மத்தியில் செல்வாக்குபெறும்போது பிற கட்சியினர் எங்களுடன் கூட்டணிக்கு வருவார்கள் - சீமான்
|நாம் தமிழர் கட்சியுடன் பிற கட்சியினர் கூட்டணிக்கு வருவார்கள் என்று சீமான் கூறினார்.
வேலூரில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சியினருடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தல் வரும்போது தி.மு.க. அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறார்கள். கடந்த ஆண்டு இந்த சோதனையை நடத்தி இருக்கலாம். 4 மாதத்தில் தேர்தல் வரப்போகிறது. அதற்காக நெருக்கடி கொடுக்கிறார்கள். காவிரியில் தண்ணீர் வாங்கித்தர முடியவில்லை. எப்படி மீண்டும் வந்து தமிழகத்தில் ஓட்டு கேட்பீர்கள். மதுரையில் எய்ம்ஸ் அமைப்போம் என்று சொல்லிவிட்டு ஒரு செங்கல்லை வைத்து விட்டு போய் விட்டார்கள். நாங்கள் முன்வைக்கும் மாற்று அரசியல் மக்கள் மத்தியில் செல்வாக்குபெறும்போது பிற கட்சியினர் எங்களுடன் கூட்டணிக்கு வருவார்கள்.
நடிகர் விஜய்யின் லியோ படத்திற்கு நெருக்கடி தருகிறார்கள் என்பது வெளிப்படையாக தெரிகிறது. ஆனால் ஜெயிலர் படத்திற்கு ஏன் நெருக்கடி இல்லை. இதற்கு முன்பு விஜய் நடித்த படங்களுக்கு இதுபோன்ற நெருக்கடி இல்லை. இதனால்தான் எங்களுக்கு சந்தேகம் வருகிறது. சினிமாத்துறை என்பது தற்பொழுது கார்ப்பரேட் கையில் அடங்கியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.