முன்னாள் மாணவர்கள் நிதி மூலம் அரசு பள்ளிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் அமைப்பு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
|முன்னாள் மாணவர்கள், தன்னார்வலர்கள் வழங்கும் நிதி மூலம் அரசு பள்ளிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் அமைப்பை நாளை (திங்கட்கிழமை) தொடங்கி வைக்க இருப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
சென்னை சேத்துப்பட்டில் உள்ள சென்னை கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, பள்ளி வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு முதல்-அமைச்சரும், அந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜி.ஜெ.மனோகர் வரவேற்று பேசினார். இதில், கலாநிதி வீராசாமி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் டி.ஆர்.பி.ராஜா, மோகன், பிரபாகர் ராஜா, பள்ளியின் முதல்வர் மற்றும் செயலாளர் பால் வில்சன், சென்னை கிறிஸ்தவ கல்லூரி சங்கத்தலைவர் கே.எம்.மேமன், பள்ளி முன்னாள் மாணவர் சங்கத்தலைவர் அருண் மேமன், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டேவிதார், பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் ஜெயராமன், முன்னாள் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், முன்னாள் மாணவர்கள் வழங்கிய நிதி மூலம் உருவாக்கப்பட்ட கூடைப்பந்து மைதானம், நீர் மேலாண்மைத்திட்டம், மாணவர்கள் கழிவறை, சோலார் திட்டம் ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மகிழ்ச்சியில் தூக்கம் வரவில்லை
அதனைத்தொடர்ந்து பள்ளியின் வரலாறு மற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அப்போது அதை பார்த்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அவருக்கு அருகில் அமர்ந்திருந்த பள்ளி தலைமை ஆசிரியர் மனோகரிடம் நினைவுகளை சிரித்தபடி பகிர்ந்து கொண்டார்.
பின்னர், மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் பேசியதாவது:-
முதல்-அமைச்சராக நான் இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை. நானும் ஒரு மாணவனாக, உங்கள் பழைய நண்பனாகத்தான் வந்து இருக்கிறேன். படித்த பள்ளிக்கு செல்ல இருக்கிறோம் என்று நேற்று (நேற்று முன்தினம்) இரவில் இருந்தே மகிழ்ச்சியில் இருந்தேன். மகிழ்ச்சியில் தூக்கமும் வரவில்லை. நான் சாதாரணமாக தூங்குவது இரவு 2 அல்லது 3 மணி ஆகிவிடும்.
மாணவர் பருவம் யாருக்கும் திரும்ப கிடைக்காத காலம். இந்த காலத்தைதான் மகிழ்ச்சியோடு கழித்திருக்கிறோம். துள்ளித்திரிந்த காலத்தை நினைத்து பார்த்தேன். நான் பள்ளியில் படித்தபோது என்னுடைய தந்தை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். நான் அமைச்சரின் மகனைப்போல நடந்து கொள்ளவில்லை என்று என் ஆசிரியர் சொன்னார். நான் அப்படி நடந்து கொள்வதை என்னுடைய தந்தையாரும் விரும்ப மாட்டார்.
பள்ளியும் ஒரு காரணம்...
நான் பள்ளிக்கு பஸ் மற்றும் சைக்கிள் மூலமாகதான் வந்தேன். அதுதான் என்னுடைய உண்மையான இயல்பு. இப்போது கூட என்னுடைய பாதுகாப்பு அதிகாரிகள் ஒத்துக் கொண்டிருந்தால், நிச்சயம் பஸ், சைக்கிளில்தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பேன். ஆனால் அவர்கள் அப்படி விடமாட்டார்கள். ஒவ்வொரு மனிதனையும் சந்தோஷமாக வைத்திருப்பது, அவர்களுடைய நினைவுகள்தான்.
எனக்கு இந்த பள்ளி வளாகம் மகிழ்ச்சியான ஞாபகத்தை தருகிறது. அரசியலுக்கு வருவேன், ஒரு கட்சிக்கு தலைவனாக வருவேன், மாநில முதல்-அமைச்சராக வருவேன் என்று நானும் நினைத்து பார்த்தது இல்லை. நீங்களும் நினைத்து பார்த்திருக்க மாட்டீர்கள். ஆனால் அது நடந்துள்ளது. ஆக இப்படி பெரிய அளவுக்கு உயர்ந்து வந்ததற்கு நான் படித்த இந்த பள்ளியும் ஒரு காரணம்.
புதிய அமைப்பு
முன்னாள் மாணவர்கள் சார்பில் பல்வேறு திட்டங்கள் இந்த பள்ளிகளில் செய்யப்பட்டு உள்ளன. இதேபோல், ஒவ்வொரு பள்ளியிலும் அந்தந்த பள்ளியில் படித்தவர்கள் பல்வேறு உதவிகளை செய்ய வேண்டும். இந்த முன்னெடுப்பை தமிழ்நாடு அரசின் சார்பிலும் செய்ய இருக்கிறோம். அதற்கான அமைப்பை வருகிற 19-ந்தேதி (நாளை) தொடங்கி வைக்க இருக்கிறேன். பொது மக்கள், முன்னாள் மாணவர்கள், தன்னார்வ அமைப்புகள் வழங்கக்கூடிய நிதி மூலம் அரசு பள்ளிகளுக்கு தேவையான அனைத்தையும் செய்ய இருக்கிறோம். இதை செய்து தருவது அரசாங்கத்தின் கடமை என்று மட்டும் நினைத்துவிடக்கூடாது. அனைத்தையும் அரசாங்கமே செய்துவிடவும் முடியாது.
அந்த திட்டத்தின் முன்னோட்டமாக நான் படித்த பள்ளியில் முன்னெடுப்பாக சில திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டிருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். முதல்-அமைச்சராக பொறுப்பேற்று எவ்வளவோ அரசு, பொது, கட்சி நிகழ்ச்சிகளுக்கு போனாலும், இந்த நிகழ்ச்சிக்கு (முன்னாள் மாணவர்கள் சந்திப்பு) எந்த நிகழ்ச்சியும் ஈடாகாது. அது என் நினைவில் பசுமையாக இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
'ஞாபகம் வருதே...' பாடலை பாட ஆசை
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கற்பித்தல் பணியை மேற்கொண்ட தமிழ் ஆசிரியர் ஜெயராமன் சில நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
அதனைத்தொடர்ந்து பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தன்னுடைய ஆசிரியர் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டதையும், நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த முன்னாள் மாணவர்கள், நண்பர்கள் முகத்தை பார்க்கும்போது போது, 'ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே...' என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது என்று நெகிழ்ச்சியோடு கூறினார். மேலும் அந்த பாடலை பாடவும் ஆசையாக இருப்பதாகவும் அவர் அப்போது தெரிவித்தார். இதை கேட்ட முன்னாள் மாணவர்கள் கை தட்டினார்கள்.
'உச்சத்தை எட்டியவர் மு.க.ஸ்டாலின்'-ஆசிரியர் ஜெயராமன் நெகிழ்ச்சி
விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கற்பித்த தமிழ் ஆசிரியர் ஜெயராமன் பேசியதாவது:-
மு.க.ஸ்டாலின் பள்ளியில் படித்தபோது, அவருடைய தந்தையார் அமைச்சராக இருந்தார். அப்படி இருந்த நேரத்திலும், அவர் பள்ளியில் 'பந்தா' செய்தது கிடையாது. நான் பெரிய ஆளு என்று சொன்னதும் கிடையாது. எனக்கு மிகவும் விருப்பமான மாணவர். அவர் மேயராக பதவியேற்றதும், வீட்டுக்கு சென்று வாழ்த்தினேன். இன்னும் உயருவார் என்ற நம்பிக்கை எனக்கு அப்போது இருந்தது. அந்த நம்பிக்கை இப்போது நிறைவேறியுள்ளது. அந்த அளவுக்கு உச்சத்தை எட்டியிருக்கிறார், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். அவருடைய சாதனை மேலும் பெருகவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.