திருச்சி
குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைப்பு
|குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தொட்டியம்:
வீட்டில் துர்நாற்றம்
தொட்டியம் அய்யப்பன் நகரை சேர்ந்த கருப்பண்ணன் மனைவி ராஜேஸ்வரி (வயது 65). கருப்பண்ணன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுடைய மகன் மணிகண்டன் நாமக்கல் அருகேயுள்ள வளையப்பட்டியில் மெடிக்கல் கடை நடத்திக்கொண்டு, அங்கு குடும்பத்துடன் வசித்து வருகிறார். மகள் பிரியா திருமணமாகி திண்டுக்கல்லில் தனது கணவருடன் வசித்து வருகிறார்.
இதனால் ராஜேஸ்வரி தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக ராஜேஸ்வரி வெளியே வரவில்லை எனவும், அவரது வீட்டிற்குள் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் தொட்டியம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனை
இதையடுத்து, போலீசார் நேற்று முன்தினம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவரது வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது ராஜேஸ்வரியின் கை, கால், வாய் ஆகியவை துண்டால் கட்டப்பட்டு அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். மேலும் மூதாட்டியை கொலை செய்த மர்ம நபர்கள், வீட்டில் வைத்திருந்த 64 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
பின்னர் மூதாட்டியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
4 தனிப்படைகள் அமைப்பு
இதையடுத்து மூதாட்டியை கொலை செய்த குற்றவாளிகளை பிடிக்க திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவண சுந்தர் அறிவுறுத்தலின்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவின்பேரில் முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு யாஸ்மின் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் முத்தையன் (தொட்டியம்), செந்தில்குமார் (முசிறி), பொன்ராஜ் (தா.பேட்டை), செந்தில்குமார் (துறையூர்) ஆகியோர் கொண்ட 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படையினர் மூதாட்டியை கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கொலை குற்றவாளிகளை விரைவில் பிடித்து விடுவோம் என்று முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு யாஸ்மின் தெரிவித்தார்.