சென்னை
விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்
|பூந்தமல்லி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
நசரத்பேட்டை,
பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை, அகரமேல் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவருடைய மகன் சந்தோஷ் (வயது 23). 'லேத் மிஷின் ஆபரேட்டராக' வேலை செய்து வந்தார். இவருடைய நண்பர் ரஞ்சித் (22). இவர்கள் இருவரும் வேலை முடிந்து இரவில் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.
மோட்டார் சைக்கிளை ரஞ்சித் ஓட்டினார். சந்தோஷ் பின்னால் அமர்ந்து இருந்தார். பூந்தமல்லி அருகே பெங்களூர் செல்லும் நெடுஞ்சாலையில் செல்லும்போது முன்னால் சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது ரஞ்சித் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் நிலை தடுமாறிய சந்தோஷ், ரஞ்சித் இருவரும் கீழே விழுந்ததில் சந்தோசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த சந்தோசை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சந்தோஷ் நேற்று முன்தினம் இரவு மூளைச்சாவு அடைந்தார்.
இதையடுத்து அவரது பெற்றோர் சந்தோசின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். இதையடுத்து சந்தோசின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.