திருவாரூர்
மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்
|மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்
திருவாரூர் அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
மோட்டார்சைக்கிள்கள் மோதல்
திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் அண்ணாமன்றம் பகுதியை சேர்ந்தவர் ஜெயசீலன் (வயது 38). இவரது மனைவி சோபியா (32). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ஜெயசீலன் திருவாரூர் அருகே புலிவலத்தில் இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடை வைத்திருந்தார். சம்பவத்தன்று இரவு வேலையை முடித்துவிட்டு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.
பின்னவாசல் பகுதியில் சென்ற போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
உடல் உறுப்புகள் தானம்
நேற்றுமுன்தினம் இரவு ஜெயசீலன் மூளைச்சாவு அடைந்து விட்டதாக டாக்டர்கள் குடும்பத்தினரிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை உறவினர்கள் தானம் செய்ய முன்வந்தனர். இதற்காக திருவாரூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் உரிய சான்றுகள் பெறப்பட்டது. குடும்பத்தினரின் சம்மதத்துடன் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி டாக்டர்கள் நேரில் சென்று சென்னை, திருச்சி மற்றும் இதர ஆஸ்பத்திரிகளில் இருந்து வந்திருந்த மருத்துவ குழுவினருடன் இணைந்து ஜெயசீலனின் கல்லீரல், இதயம், கண், நுரையீரல், சிறுநீரகம் ஆகிய உடல் உறுப்புகளை பிரித்து எடுத்து உரிய ஆஸ்பத்திரிகளுக்கு எடுத்துச்சென்றனர். உறுப்பு தானத்துக்கு பின்னர் ஜெயசீலனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.