திருச்சி
மூளைச்சாவு அடைந்த என்ஜினீயரின் உடல் உறுப்புகள் தானம்
|மூளைச்சாவு அடைந்த என்ஜினீயரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
கரூர்:
என்ஜினீயர்
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் மகாதானபுரம் கம்மாநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 55). இவருடைய மனைவி விஜயா(50). இவர்களுக்கு நவீன்குமார்(30), சுபாஷ்(23) ஆகிய 2 மகன்களும், ரம்யா (26) என்ற மகளும் உண்டு. ராஜேந்திரனும், விஜயாவும் கோவை பீளமேட்டில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கொத்தனார் வேலைக்கு சென்று வருகிறார்கள்.
டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் முடித்துள்ள சுபாஷ் கோவையில் உள்ள ஒரு தனியர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வந்தார். கடந்த 10-ந்தேதி ஓட்டுனர் உரிமம் எடுப்பதற்காக கம்மாநல்லூருக்கு சுபாஷ் வந்திருந்தார். கடந்த 12-ந்தேதி வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு சென்று ஓட்டுனர் உரிமம் பெற்ற அவர், அன்று மாலை ஊருக்கு செல்வதற்காக தனது துணிமணிகளை பையில் எடுத்து வைத்து தயாரானார்.
ரெயில் மோதி மூளைச்சாவு
பின்னர், அவர் அருகில் உள்ள ரெயில் தண்டவாள பகுதிக்கு இயற்கை உபாதை கழிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது திருச்சியில் இருந்து கரூர் நோக்கி சென்ற பயணிகள் சிறப்பு ரெயில் சுபாஷ் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்த அவர் நேற்று முன்தினம் நள்ளிரவில் மூளைச்சாவு அடைந்தார். இதைக்கேட்டு கதறி அழுத சுபாசின் பெற்றோர், மனதை தேற்றிக்கொண்டு, தனது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.
உறுப்புகள் தானம்
இதுபற்றி டாக்டர்கள், மருத்துவமனை டீன் நேருக்கு தகவல் கொடுத்தனர். அவர், முறைப்படி உடல் உறுப்பு தானம் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து நேற்று காலை மருத்துவக்குழுவினர் அவருடைய இதயம், நுரையீரல், 2 சிறுநீரகங்கள் ஆகியவற்றை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.
பின்னர் அவை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டு, இதயம், நுரையீரல் ஆகியவை திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 2 நோயாளிகளுக்கு அவை பொருத்தப்பட்டது.
4 பேருக்கு மறுவாழ்வு
2 சிறுநீரகங்களில் ஒன்று மதுரைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பப்பட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஒரு நோயாளிக்கும், மற்றொரு சிறுநீரகம் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் ஒரு நோயாளிக்கும் பொருத்தப்பட்டது.
என்ஜினீயர் சுபாஷ் இறந்தாலும், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ததால் 4 பேருக்கு மறுவாழ்வு அளித்து இருப்பதாக டாக்டர்கள் கூறினர். பின்னர் சுபாசின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து கரூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.