சேலம்
சேகோசர்வ் ஊழியரின் உடல் உறுப்புகள் தானம்
|விபத்தில் மூளைச்சாவு அடைந்த சேகோ சர்வ் ஊழியரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
விபத்தில் மூளைச்சாவு அடைந்த சேகோ சர்வ் ஊழியரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
விபத்தில் மூளைச்சாவு
மல்லூரை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 26). பி.காம். பட்டதாரியான இவர், சேலம் சேகோ சர்வ் ஆலையில் ஒப்பந்த அடிப்படையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த மாதம் 30-ந் தேதி இரவு பணி முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றார். கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே சென்றபோது, பின்னால் வந்த டேங்கர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே, விபத்தில் படுகாயம் அடைந்த மணிகண்டன் மூளை ச்சாவு அடைந்ததாக அவரது உறவினர்களிடம் டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் அவரது உடல் உறுப்புகளை தானமாக கொடுத்தால் சிலர் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக டாக்டர்கள் கூறினர்.
உடல் உறுப்புகள் தானம்
அதற்கு மணிகண்டனின் பெற்றோர் சம்மதம் தெரிவித்ததையடுத்து, அவரது உடல் உறுப்புகள் தானம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்த தகவல் சென்னையில் உள்ள தமிழ்நாடு உடல் உறுப்பு தான மாற்று சிகிச்சை ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர் அந்த ஆணையத்தில் பதிவு செய்து காத்திருப்பவர்களுக்கு மணிகண்டனின் உடல் உறுப்புகளை பொருத்த முடிவு செய்யப்பட்டது.
இந்தநிலையில், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று மூளைச்சாவு அடைந்த மணிகண்டனின் இதயம், கண்கள், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள் உள்ளிட்ட உடல் உறுப்புகள் அறுவை சிகிச்சை செய்து எடுக்கப்பட்டது. இதையடுத்து ஏற்கனவே தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்சில் சென்னைக்கு இதயம், நுரையீரல், கோவைக்கு கல்லீரல், ஈரோடுக்கு சிறுநீரகம் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டன.