சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்யும் விதமாக அவசர சட்டம்: மத்திய அரசுக்கு, திருமாவளவன் கண்டனம்
|சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்யும் விதமாக அவசர சட்டம்: மத்திய அரசுக்கு, திருமாவளவன் கண்டனம்.
சென்னை,
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத் தான் அதிகாரம் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. கவர்னரை வைத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி அரசாங்கத்தை செயல்படவிடாமல் தடுத்துக் கொண்டிருந்த மோடி அரசாங்கத்திற்கு இந்த தீர்ப்பு மிகப்பெரிய அடியாக விழுந்தது. அதை பொறுத்துக் கொள்ளாத மோடி அரசு உடனடியாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்யும் விதமாக அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது.
இது அப்பட்டமாக கோர்ட்டை அவமதிப்பதாகும். இந்த ஜனநாயக படுகொலையை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். மோடி அரசு இந்த அவசர சட்டத்தைத் திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
மோடி அரசின் இந்த தாக்குதல் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கு எதிரானது மட்டும் இன்றி ஒட்டுமொத்த நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கும். கூட்டாட்சி தத்துவத்துக்கும் எதிரானதாகும். இதனைக் கண்டிக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுகிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.