மக்கள் சுகாதாரம், தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க முயலும் அரசாணையை திரும்பப் பெற வேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
|மக்கள் சுகாதாரம், தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க முயலும் அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
சென்னை,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அக்டோபர் 20, 2022ஆம் தேதி வெளியிட்ட அரசாணை 152 நகர்ப்புற உள்ளாட்சி கட்டமைப்பினை தனியார்வசம் தள்ளிவிடும் நோக்கம் கொண்டது. தற்போது இத்துறையில் உள்ள நிரந்தரப் பணியாளர்கள் ஓய்வு பெற்றதும் புதிய பணியாளர்களை நியமனம் செய்ய தடைவிதிக்கிறது.
சுகாதாரம் மற்றும் தூய்மைப் பணிகளையும், நிர்வாகப் பணியாளர்களையும் வெளிமுகமை மேற்கொள்ள வழிவகை செய்துள்ளது. தற்போது நகராட்சி நிர்வாக இயக்குநரின் உத்தரவுப்படி உள்ளாட்சியில் ஒப்பந்தங்கள் மூலம் அமர்த்தப்பட்ட பணியாளர் ஒருவர், ஒரு வேலை நாளில் எட்டு கிலோ மீட்டர் தூரம் சுத்தம் செய்ய வேண்டும் என்ற முதுகை முறிக்கும் வேலைப்பளுவை ஏற்றி, பெற்றுவந்த ஊதியத்தை சரிபாதியாக வெட்டிக் குறைத்துள்ளது.
மக்கள் சுகாதாரம் மற்றும் தூய்மைப் பணிகளை அரசு கைகழுவி விட்டு, தனியாரிடம் ஒப்படைக்க முயலும் அரசாணை 152ஐ திரும்பப் பெற்று, சுகாதாரக் கட்டமைப்பை அரசின் கட்டுப்பாட்டில் மேலும் வலுப்படுத்தி, விரிவுபடுத்த வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.