நாகப்பட்டினம்
1,072 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வங்கி கணக்கில் செலுத்தும் ஆணை
|நாகையில் 1,072 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வங்கி கணக்கில் செலுத்தும் ஆணையை கலெக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார்.
வெளிப்பாளையம்:
நாகையில் 1,072 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வங்கி கணக்கில் செலுத்தும் ஆணையை கலெக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார்.
புதுமைப்பெண் திட்டம்
தமிழக முதல்-அமைச்சர் முக.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து காணொலிக்காட்சி மூலம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி புதுமைப்பெண் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதை தொடர்ந்து நாகை அரசு மருத்துவக்கல்லூரியில் நடந்த விழாவில் அரசு பள்ளியில் பயின்று மேற்படிப்பு பயிலும் 1,072 மாணவிகளுக்கு தலா ரூ.1000 உதவித்தொகை அவரவர் வங்கி கணக்கில் செலுத்தும் ஆணைகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட சமூகநல அலுவலர் பாத்திமுன்னிசா வரவேற்றார். மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், தமிழ்நாடு தாட்கோ தலைவர் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் அருண்தம்புராஜ், மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வங்கி கணக்கில் செலுத்தும் ஆணைகளை வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
உதவித்தொகை
மகளிர் வாழ்வில் முன்னேற்றம் அடைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பெண்களின் உயர்கல்வி தடைப்பட்டு விடக்கூடாது என்பதற்காக 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் புதுமைப்பெண்திட்டத்தை செயல்படுத்தி உள்ளார்.
நாகை மாவட்டத்தில் முதல் கட்டமாக 1,072 மாணவிகளுக்கு வழங்கப் படுகிறது. முதலாம் ஆண்டு படிக்கும் மாணவிகளுக்கு படிப்படியாக இந்த உதவித்தொகை வழங்கப்படும். மருத்துவக்கல்லூரி படிக்கும் மாணவிகளும் புதுமைபெண் திட்டத்தில் சேர்க்கப்பட்டு கல்வி உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
4 ஆயிரம் மாணவிகள் தேர்வு
நாகை மாவட்டத்தில் 4 ஆயிரம் மாணவிகள் இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே இந்த புதுமைப் பெண் திட்டத்தை பயன்படுத்தி கொண்டு மாணவிகள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.இந்த திட்டத்தால் உயர்கல்வி கற்கும் பெண்களின் சதவீதம் அதிகரிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
இதில் எம்.எல்.ஏ.க்கள் முகமது ஷாநவாஸ், நாகைமாலி, நாகை ஊராட்சி ஒன்றிய தலைவர் அனுசியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.