சென்னை
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பாழடைந்த கட்டிடங்களை கண்காணிக்க உத்தரவு - மாநகராட்சி கமிஷனர் தகவல்
|வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னையில் பாழடைந்த கட்டிடங்களை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை தேனாம்பேட்டை, லாய்ட்ஸ் காலனியில் உள்ள பணிமனை வளாகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள மாநகராட்சி வாகனங்கள், மீட்பு உபகரணங்கள், மர அறுவை எந்திரங்கள், மோட்டார் பம்புகள் உள்ளிட்டவைகளை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். ஆய்வின் போது, கூடுதல் கமிஷனர் லலிதா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
பின்னர், கமிஷனர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தென்மேற்கு பருவமழையின் போது தண்ணீர் தேங்கிய சவாலான பகுதிகள் அடையாளம் காணப்பட்டு அப்பகுதிகளில் வடகிழக்கு பருவழைக்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். அந்த வகையில், மழைநீரை அகற்றுவதற்காக உயர்திறன் கொண்ட டீசல் என்ஜின் மோட்டார் பம்புகள், எலெக்ட்ரிக்கல் நீர் மூழ்கி மோட்டார் பம்புகள் என 845 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன.
மேலும், பாப்காட் எந்திரங்கள், ஜே.சி.பி. எந்திரங்கள், பாப்காட் எந்திரங்கள் என 446 பேரிடர் மீட்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது. தண்ணீர் தேங்குவதாக கண்டறியப்பட்ட 650 பகுதிகளில் தண்ணீரை வெளியேற்றுவதற்கான மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளது. சென்னையில் 3 ஆயிரத்து 331 கிலோ மீட்டரில் மழைநீர் வடிகால் பணிகளை முடிந்துவிட்டது. அனைத்து பணிகளையும் திட்டமிட்டபடி முடித்து வருகிறோம். மழைநீர் செல்லும் வடிகால்களை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பாழடைந்த கட்டிடங்களை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கவுன்சிலர்கள், ஊழியர்கள், அதிகாரிகள் மூலமாக இப்பணியை மேற்கொண்டு வருகிறோம். இதேபோல, இந்த மாதம் தெருவில் சுற்றித்திரிந்த 264 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிடிபடும் மாடுகளை கொடுங்கையூர் போன்ற பகுதிகளுக்கு கொண்டு செல்வது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம். வருவாய் சார்ந்த பணிகளையும் திரம்பட மேற்கொள்ள வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.