திருவண்ணாமலை
ஆன்லைனில் ஆர்டர் செய்து செல்போன் பறிப்பு
|செய்யாறு அருகே போலி முகவரி கொடுத்து ஆன்லைனில் ஆர்டர் செய்து செல்போன் பறித்த கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர்.
செய்யாறு
சேத்துப்பட்டு அருகே பெரியகொழப்பலூர் மருத்துவமனை தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 21), தனியார் கூரியர் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
செய்யாறு அருகே மேல்நகர்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் திருமலை (20), கல்லூரி மாணவன். இவர் ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்துள்ளார்.
அந்த செல்போன் பார்சல் கார்த்திக்கிடம் வந்தது. அதனை டெலிவரி செய்ய திருமலைக்கு போன் செய்துள்ளார்.
அப்போது திருமலை, நான் கீழ்பழந்தை கூட்ரோட்டில் உள்ளேன். அங்கு வந்து டெலிவரி கொடுத்துவிடுங்கள் என்றார். அதன்படி கார்த்திக் அங்கு சென்றார்.
அங்கிருந்த திருமலை, பணத்தை கொடுக்காமல் பார்சல் பார்கோடு ஸ்கேன் செய்வதற்குள் கார்த்திக்கிடம் இருந்த பார்சலை பறித்துக் கொண்டு மோட்டார்சைக்கிளில் தப்பி சென்றார்.
இதனால் அதிர்ச்சியடைந்த கார்த்திக், பார்சல் வந்த முகவரிக்கு சென்று பார்த்தபோது போலியான முகவரி என தெரிய வந்தது.
இதுகுறித்து செய்யாறு போலீசில் கார்த்திக் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
மேலும் செல்போனின் ஐ.எம்.ஐ.இ. எண்ணை வைத்து கண்காணித்து திருமலையை இன்று போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவரை செய்யாறு கோர்ட்டில் ஆஜர்படுத்தி வந்தவாசி கிளை சிறையில் அடைத்தனர்.